திருமணத்தடை நீக்கும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்
போடி: சகல சவுபாக்கியங்களையும் அள்ளித்தரும் வகையில் போடி திருமலாபுரத்தில் அமைந்துள்ளது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில். 100 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயில் சவுடேஸ்வரி அம்மனின் வலது புறத்தில் லிங்கம் உள்ளதால் இவ்வாறு அழைக்கப் படுகிறது. கோயில் வளாக பிரகாரத்தில் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும், அனுமன், துர்க்கை அம்மன், காலபைரவரும், நவக்கிரகங்கள் மற்றும் வீரபத்திரர், அம்மனின் பின்புறத்தில் தட்ஷணாமூர்த்தியும் உள்ளனர். முழுவதும் சலவை கல்லிலான கிருஷ்ணர் சிலை இங்கு உள்ளது.
வடக்கு நோக்கி அமைந்துள்ள அம்மனை வணங்கினால் திருமண தடை நீங்கி திருமணம் நடந்து, குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் மனநிம்மதி தருவதாக ஐதீகம். காலபைரவரை வணங்கினால் வழக்கு சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு, கண்ட, அஷ்டமத்து சனி விலகும். வேண்டுதல் நிறைவேறிய பின் வடைமாலை அணிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இக்கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரியகும்பிடு விழாவும், ஆண்டுக்கு ஒரு முறை வருஷாபிஷேகமும் நடக்கிறது. தினமும் காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரையும், மாலை 5 :00மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். இதில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடைபெறும். ஆடி, தை மாத வெள்ளிக் கிழமைகளில் வரலட்சுமி பூஜைகளும் நடைபெறும். கால பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று இரவு சிறப்பு பூஜை செய்வது இக்கோயில் சிறப்பாகும். வாரந்தோறும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. விழா நாட்களில் கோயிலில் அதிக பக்தர்கள் கூட்டம் இருக்கும். மேல் விபரங்களுக்கு அர்ச்சகர் பி.சிவமணிகண்டனை 90438 33880 என்ற எணணில் தொடர்பு கொள்ளலாம்.