சுவாமி அலங்காரத்தில் ஆனந்தம்: பரவசப்படுகிறார் வினோத்
அருப்புக்கோட்டை: கோயில்களில் சென்று வழிபாடு செய்வது இன்று அதிகமாகி விட்டது. அனைத்து கடவுள்களும் அலங்கார பிரியர்கள் என்றே சொல்லலாம். சுவாமியை நன்கு அலங்காரம் செய்து அசத்துவதில் பல கோயில் குருக்கள் உள்ளனர். சுவாமியை அலங்காரம் செய்து விட்டு பார்க்கும் போது, சுவாமியே நேரில் வந்து விட்ட தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அலங்காரம் இருக்கும். அந்த வகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் குரு வினோத், சுவாமிகளை அலங்காரம் செய்வதில் வல்லவர். இக்கோயிலில் உள்ள மீனாட்சி, சொக்கநாதர், பிள்ளையார், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி உட்பட சுவாமிகள் இவருடைய அலங்காரத்தில் அற்புதமாக காட்சி தருவர். சிறு வயதில் இருந்து கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ள இவர், பிள்ளையார்பட்டி வேத பாட சாலையில் 5 ஆண்டு வேதங்கள் படித்துள்ளார். சந்தனம், அரிசி மாவு, விபூதி, குங்குமம், பூக்கள் ஆகியவற்றை பயன்படுத்தி அலங்காரம் செய்கிறார்.
வினோத், “சுவாமியை அலங்காரம் செய்வதில் எனக்கு ஈடுபாடு உண்டு. கற்பனை கலந்து சந்தனம், விபூதி, பூக்கள் கொண்டு அலங்காரம் செய்வேன். சிறிய சுவாமி சிலை என்றால் 1 மணி நேரத்தில் அலங்காரம் செய்து விடுவேன். பெரியதாக இருந்தால் நேரம் ஆகும். விழா காலங்களில் என் சகோதரர் பாபு குருக்களுடன் சேர்ந்து அலங்காரம் செய்வேன். இதுதவிர, கும்பாபிஷேகம், கணபதி பூஜை, திருமணம் உட்பட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்வதுண்டு. பய பக்தியுடன் செய்தால், எல்லாமே சாத்தியம்,”என்றார். இவரை 98944 96237 ல் தொடர்பு கொள்ளலாம்.