திருப்பதி ஏழுமலை வெங்கடேசா!
செப்.17 ல் புரட்டாசி மாதம் பிறப்பதை ஒட்டி திருப்பதி வெங்கடேசர் குறித்த தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.இரட்டிப்பு பலன் கிடைக்கணுமா திருப்பதி ஏழுமலையானுக்கு கோயில் கட்டிய மன்னர் தொண்டைமான் சக்கரவர்த்தி. இவர் தினமும் பெருமாளை தங்க தாமரை மலர்களால் வழிபட்டு வந்தார். ஒருநாள் பெருமாள் முன், மண் மலர்கள் சிதறிக் கிடக்க கண்டார். இதற்கு காரணமானவர் யார் என்பதை பெருமாளிடம் கேட்டார். பீமன் என்னும் குயவனே இதற்கு காரணம். சனிக்கிழமை விரதமிருக்கும் அவன், தினமும் பணியைத் தொடங்கும் முன், மண் மலர்களால் எனக்கு அர்ச்சனை செய்வான். அவனுடைய பக்தியை உலகறியச் செய்ய இந்த மண் மலர்களையும் ஏற்று அருள்புரிந்தேன் என அசரீரி கேட்டது. பணத்தை விட பக்தியே அவசியம் என்பதை இந்த சம்பவம் மூலம் ஏழுமலையான் உணர்த்தினார். இந்தபுரட்டாசி சனி நாளில் விரதமிருந்து திருப்பதி பெருமாளை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
வெற்றி கொண்டாட்டம் தனது ஆட்சிக்காலத்தில், ஏழுமலையானை தரிசிக்க ஏழு முறை வந்தவர் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர். விஜய நகர ஆட்சியில் கி.பி.1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் இவர். ஒவ்வொரு முறையும் ஏராளமான தங்கம், நவரத்தினம், ஆபரணம் என காணிக்கை செலுத்தினார். உதயகிரி கோட்டையை கைப்பற்றிய போது, வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஏழுமலையானுக்கு 30,000 பவுன்களால் கனக அபிஷேகம் செய்து நன்றி தெரிவித்தார்.
பாட்டால் நன்றி சொன்னவர் ஆந்திராவில் கடப்பா மாவட்டத்திலுள்ள தளபாகம்
என்னும் கிராமத்தில் 600 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் அன்னமாச்சாரியார். இவர் பசியால் வாடிய போது, பத்மாவதி தாயாரே நேரில் காட்சியளித்து உணவளித்தார். அதற்கு நன்றிக்கடனாக தன் 16வது வயது முதல் 80 வயது வரை திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் 32 ஆயிரம் பாடல்களை பாடி மக்களிடையே பக்தியை பரப்பினார். தெலுங்கில் உள்ள இவரது பாடல்கள் செப்பு தகட்டில் பொறிக்கப்பட்டு கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.