உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழந்தமிழர்களின் பொக்கிஷம் திருமலை

பழந்தமிழர்களின் பொக்கிஷம் திருமலை

சிவகங்கையில் இருந்து 15 கி.மீ.,ல் உள்ளது திருமலை கிராமம். நீர்நிலைகள், வயல்வெளிகள் நிறைந்த பசுமையான பகுதி. குன்றின்மேல் நின்று பார்த்தால் இக்கிராமம் குளத்தின் நடுவே பூத்திருக்கும் தாமரை போல் காட்சியளிக்கும். இங்குள்ள குன்றில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள், சமணர் குகை, 8ம் நுாற்றாண்டு முற்காலப் பாண்டியரின் குடைவரைக் கோயில், 13ம் நுாற்றாண்டு பிற்கால பாண்டியரின் கட்டுமான கோயில் என ஒருங்கேஅமையப் பெற்றுள்ளன.

குன்றின் பாறையை குடைந்து கட்டப்பட்ட குடைவரைக் கோயிலில் சிவன், மீனாட்சி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார். அருகே சுப்ரமணியர் சுவாமி குறவர் வேடத்தில் சேவற்கொடியுடன் பாசி மாலையணிந்துள்ளார். இம்மூன்று உருவங்களும் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. குடவரை கருவறையின் இருபக்க சுவர்களிலும் அந்தணர்கள் வழிபடுவது போல் ஓவியங்கள் உள்ளன. இந்த குடவரை கோயில் 8 ம் நுாற்றாண்டில் முற்கால பாண்டியர்களால் உருவாக்கப்பட்டது. இக்கோயிலுக்கு வெளியே 13 ம் நுாற்றாண்டில் பிற்கால பாண்டியர்களால் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. அதில் பாகம்பிரியான் அம்மனுடன் மலைக்கொழுந்தீஸ்வரர் லிங்க வடிவமாக காட்சியளிக்கிறார். கோபுரம் பின்புறம் விநாயகர் சடைமுடியுடன் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

வலதுபுறத்தில் சுப்ரமணியர் சுவாமி ஆறுமுகத்துடன் உள்ளார். சனீஸ்வரர் காகத்தின் மீது தன் காலை வைத்திருப்பது போன்ற அரிய காட்சியும், தோன்றிய காலத்தில் கோயிலை காத்த கருவவீரபாண்டியனுக்கு சிலையும் உள்ளன. காலபைரவர் தனது வலது கையில் அனுமன் போல் கதாயுதம் வைத்துள்ளது பிரமிக்க வைக்கிறது. கோயிலை சுற்றிலும் 8 சுனைகள் உள்ளன. மேற்புறம் உள்ள பெரிய சுனையில் நீர் வற்றாது. இச்சுனை நீரையே சுவாமியின் அபிேஷகங்களுக்கு பயன்படுத்துகின்றனர். அச்சுனை நீரை யாரும் அசுத்தம் செய்வதில்லை. சுனைக்குள் விநாயகர் உருவம் பொறித்த கல் உள்ளது. அகத்தியர் வாழ்ந்த இடம்பாறையின் தெற்கு பகுதி அகத்திய முனிவர் வாழ்ந்த இடமாக கூறப்படுகிறது. அப்பகுதியில் அகல்விளக்கு போன்று பாறை உள்ளது. இங்கு அகத்தியரின் ஓம் என்று சொல் இன்றும் ஒலிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சமணர் படுக்கைகள்பம்பரமலைக்கு மேற்கே பெரிய பாறைகளின் இணைவில் வடக்கு நோக்கி இரு குகைகள் உள்ளன. அவற்றின் அடித்தளப் பகுதியில் சமணர்களின் படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. அருகே பாண்டவர், ராமர், சீதை ஓய்வெடுத்த படுக்கைகளும் காணப்படுகின்றன.

இங்குள்ள குகைகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளனர். இறப்பை பொய்யாக்கும் மூலிகைகள் இக்குன்றையொட்டி இருந்ததாக கூறப்படுகிறது. கி.பி. 2 ம் நுாற்றாண்டில் சமண துறவிகள் மைசூரில் இருந்து கொங்கு நாட்டின் வழியாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். சமணப் படுக்கைகளின் அமைப்பு சிறப்பம்சம் நிறைந்ததாக உள்ளது. சமதளப் படுக்கையாக இல்லாமல் தலைவைக்கும் பகுதி உயரமாகவும், கால் நீட்டும் பகுதி சீரான இறக்கமாகவும் உள்ளன. இப்படுக்கைகளைகளை சுற்றி சிறிய வாய்க்கால் போன்று பாறையில் செதுக்கியுள்ளனர். இவ்வாய்க்கால் மழைநீர் படுகைக்குள் ஊர்ந்து வந்துவிடாமல் தடுக்கிறது. மேலே உள்ள பாறைகளில் இருந்து தண்ணீர் சொட்டு கீழே விழாமல் இருக்க மேல் பாறையின் விளிம்புகளில் ஒரு கொடுங்கை போன்ற சின்ன வளைவு வெட்டப்பட்டுள்ளது. இந்த படுகைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது. சுவஸ்திக்: சமணர் படுகைகள் மேலே சுவஸ்திக் முத்திரை பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. இம்முத்திரை தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத ஒன்று. இங்குள்ளது வலம் நோக்கிய சுவஸ்திக். இந்த முத்திரை இந்து, பவுத்தம், சமணம் ஆகியவற்றில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள சுவஸ்திக் முத்திரை சமணர்களால் பயன்படுத்தப்பட்டவை. இந்த முத்திரை சிந்துசமவெளி நாகரிக காலத்திலேயே பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

பிற்கால பாண்டியர்களின் கல்வெட்டுகள்: பிராமிக் கல்வெட்டுகளை தவிர்த்து கோயிலைச் சுற்றிலும் பிற்கால பாண்டியர்களின் 31 கல்வெட்டுகள் உள்ளன. இதன்மூலம் 13 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சடையவர்ம குலசேகரப்பாண்டியன், முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்ம விக்கிரமபாண்டியன், இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன், சடாவர்ம வீரபாண்டியன், சடாவர்ம பராக்கிரமபாண்டியன், திரிபுவனசக்கரவர்த்தி கோனேரின்மாய்கொண்டான் ஆகிய மன்னர்களுக்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பை அறிய முடிகிறது.

சுடுமண் பொம்மைகள்: திருமலை குன்றின் உச்சியில் பழங்கால ஓவியங்கள் வரையப்பட்ட குகைகளுக்கு அருகே பண்டைய காலத்து உடைந்த சுடுமண் பொம்மைகள், நன்கு சுடப்பட்ட செந்நிறப் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. பானை ஓடுகளில் பதிக்கப்பட்ட அழகு வேலைபாடுகள் ( முக்கோணத்தின் உள்ளே சிறு வட்டங்கள்) செய்யப்பட்டுள்ளன. யானையொன்றின் தலைப்பகுதி, உடைந்த கிரீடத்தின் எஞ்சிய பகுதியும் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்ட குகைகள் மிக நீண்டதாகவும், இருட்டாகவும் காணப்படுகின்றன. இக்குகைக்குள் ஆய்வு செய்தால் மேலும் பல தொல்லியல் தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஒரே இடத்தில் தேன்கூடு:
பி.தங்கராஜ் :குன்றில் ஆண்டுதோறும் பெரிய மலைத்தேன் கூடு கட்டப்படுகிறது. இக்கூடு கட்டும் காலத்தில் எங்கள் கிராமத்தில் நல்ல விளைச்சல் இருக்கும். கூடு கட்டவில்லை என்றால் எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்படும். சண்டை சச்சரவுகளும் அதிகரிக்கும். அந்த தேன் கூடு அதுவாக கலைந்து விடும். யாரும் கலைத்தால் உயிர் பிழைக்க முடியாது. குன்றின் பாறை முழுவதும் ஆங்காங்கே உடல் உறுப்புகள் செதுக்கப்பட்டுள்ளன. நோய் பாதித்த உறுப்பை பாறை மீது பொறித்தால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. திருமலை சுற்றுலா பகுதியாக அறிவிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

கங்கைக்கு இணையான தாமரைக்குளம்:  எம்.வைத்தியலிங்கம்: திருமலை அகத்தியர், சமண முனிவர்கள், சங்ககால புலவர்கள் வாழ்ந்த இடமாக இருந்துள்ளது. குடவரை கோயில் மட்டுமின்றி, பழங்கால மனிதன் வரைந்த ஓவியங்கள், சமணப் படுகைகள், பிராமிக் கல்வெட்டுகள், சுவஸ்திக் முத்திரை என, பல பொக்கிஷம் நிறைந்த இடமாக உள்ளது. மலையடிவாரத்தின் வடக்கே சேங்கை என கூறப்படும் தாமரைக்குளம் உள்ளது. இங்கு குளித்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும். இக்குளத்தில் அதிகளவில் மீன்கள் காணப்படும்.அவற்றை பிடித்து சமைத்தால் அம்மீன்கள் அறுக்கப்படும்போது உறவுகளை இறைவன் அறுத்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் மீன்களை பிடிப்பதில்லை. நீர்ப் பெருக்கெடுத்து ஓடுங்காலத்தில் சேங்கையை விட்டு வெளியேறும் மீன்களை பிடித்து கொள்வோம்.

பாதுகாக்க வேண்டும்:
எம். அய்யனார்: மலைக்கொழுந்தீஸ்வரர் கருவறை கல்வெட்டு மூலம் இக்கோயிலில் ஐந்நுாற்றுவன் திருக்காவணம் என அழைக்கப்படும் ஒரு மண்டபம் இருந்துள்ளது. இங்கு பல்வேறு ஜாதியைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி வணிகப்பொருட்களுக்கு வரிகளை தீர்மானித்துள்ளனர். இந்த வரியை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். குகைகள், பாறை ஓவியங்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தி வருகின்றனர். அவற்றை பாதுகாக்கும் முறையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தொல்லியல்துறையினர் மேலும் ஆய்வு மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவரும்.

பாறை ஓவியம்: பாறை ஓவியங்களும் ஏராளமாக காணப்படுகின்றன. இரு ஆடவர்கள் சண்டையிடுவது, பறவைகள் போன்ற வேடமணிந்த மனிதர்கள், தமறு என்ற இசை வாத்தியத்தை வாசிப்பது, கையில் கம்புடன் குதிரை ஓட்டுவது போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. அவற்றை இரு விதமாக வரைந்துள்ளனர். ஒன்றில் முழுமையாக வண்ணம் தீட்டாமல் உருவங்களை மட்டும் மெல்லிய கோடுகளால் வரைந்துள்ளனர். மற்றொன்றில் உருவங்களை வண்ணத்தால் அழகுற முழுமையாக தீட்டியுள்ளனர். சில ஓவியங்களில் இருமுறைகளும் கையாளப்பட்டுள்ளன. இவை மூலிகைகளால் வரையப்பட்டவை.

பிராமிக் கல்வெட்டுகள்: சமணர் படுக்கைகளுக்கு அருகே மற்றொரு குகை நெற்றியில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகள் தங்களுக்கு படுக்கை அமைத்து கொடுத்தவர்களுக்கு நன்றி கடனாய் சமணர்கள் வெட்டுவித்ததாக கூறப்படுகிறது. பஞ்சபாண்டவர் படுக்கை பகுதியில் 2 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் கி.மு., 3 நுாற்றாண்டைச் சேர்ந்தவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !