இன்னல் போக்கும் வரதராஜபெருமாள் கோவில்
பொள்ளாச்சி: கோவில் கட்டுமானப்பணியை கிராம மக்களும், முக்கியஸ்தர்கள் முன்னின்று கவனிப்பார்கள். ஆனால், நெகமம் அருகே, வரதனுார் ஊராட்சிக்கு உட்பட்ட மூட்டாம்பாளையம், செங்குட்டைபாளையம் கிராம மக்களின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பில், ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்துள்ளது. முந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சிறு ஓலை குடிசையில் கோவில் இருந்தது. பக்தர்களின் சீரிய திருப்பணியால், கோவிலுக்கு சுவர் அமைத்து, ஓட்டுக்கூரை அமைக்கப்பட்டது. சமீபத்தில், பக்தர் ஒருவர் வரதராஜபெருமாளை வணங்கி விட்டு, கோவிலுக்குள் உட்கார்ந்திருந்த போது, மேற்கூரையை பார்த்துள்ளார். அது சிதிலமடைந்துள்ளதை கண்டார். உடனடியாக இறைவனை வணங்கி, கிராம மக்களிடம் ஆலோசனை கேட்டார். அதன்பின், முறைப்படி இறைவனிடம் (பூ கேட்டு) உத்தரவு பெற்று, கோவில் சீரமைக்கப்பட்டது. கிழக்கு திசை நோக்கிய ஆலயத்தில், மூலவர் அருள்பாலிக்கிறார். கோவில் தலவிருட்சமாக, 300 ஆண்டுகால ஆலமரம் உள்ளது.
கோவில் எதிரே ஜோதி விளக்கேற்றும் உயரமான கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருவோர், ஜோதி மரக்கம்பத்தை சுற்றி வழிபட்ட பிறகே, மூலவரை தரிசிக்கின்றனர். சமீபத்தில், கோவில் கும்பாபிஷேகம் நடந்ததால், 48 நாட்களுக்கு மண்டல பூஜை, அன்னதானம் நடக்கிறது. கோவிலில், மூலவர் முன் அமர்ந்து, மனமுருகி வழிபடுவோருக்கு திருமணத் தடை உள்ளிட்ட தோஷங்கள் விலகுகிறது. விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோய் நீங்கவும், மக்களின் இன்னல் போக்கவும் வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார்.