நேர்த்தி கடன் தீர்க்க உப்புசுவாமி: பண்டம் மாற்றிய உமணர்கள்
உடுமலை: இயற்கையை மட்டுமே வணங்கி வந்த மனிதர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு, புதிய புதிய வழிபாடுகளை உருவாக்கினர். அதில், வித்தியாசமான ஒன்றுதான் ’உப்புசாமி’ வழிபாடு. பழமையான காலம் முதல் நோய்கள் தீருவதற்கு மருத்துவம் ஒரு முறையாக இருந்தாலும், வழிபாடுகளை இன்னொரு முறையாக மக்கள் நம்பினார்கள். கடந்த நூற்றாண்டின் பிற்பாதி வரையில் கிராமப்பகுதியில் மருத்துவ வசதிகள் குறைவாகவே இருந்தன.சிறிய பாதிப்புகளுக்கு மருத்துவரிடம் செல்வதை விட கடவுள் வழிபாடுகளில் மக்கள் கவனம் செலுத்தினர்.
உமணர்கள் வரலாறு: போக்குவரத்து தொடர்புகள் குறைவாக இருந்த, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, உப்பு மிகவும் அரிதானதாகவும், காத்திருந்து வாங்கும் பொருளாகவும் இருந்தது. கடல் பகுதியில் தயாரிக்கப்படும், உப்புக்களை, நூறுக்கும் மேற்பட்ட மூட்டைகளாக கட்டி, கழுதைகளில் ஏற்றி ஒவ்வொரு ஊராகச்சென்று விற்பனை செய்வது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, முக்கிய வியாபாரமாகும். இந்த வியாபாரிகளை ’உமணர்கள்’ என மக்கள் அழைத்தனர். தைமாதம் தொடங்கும் இந்த வியாபாரம் ஆவணிமாதம் வரை (மழை காலம் தொடங்கும் வரை) நீடிக்கும். கிராம மக்கள் ஒரு ஆண்டுக்கு தேவையான உப்பை மூட்டைகளில் அல்லது பெரிய குதிர்களில் சேமித்தனர். பண்டமாற்று முறையில் இந்த வியாபாரம் நடந்தது. உணவுக்கு சுவை சேர்த்த உப்பை மிகவும் மதிப்புமிக்க பொருளாக மக்கள் பயன்படுத்தினர். அனைத்து விசஷேங்களிலும் உப்பு முக்கிய இடம்பெற்றது. இன்றும் அப்படிதான்.
உப்பு காணிக்கை : உயர்வாக மதிக்கப்படும் ஒன்றை காணிக்கையாக்குவது நமது வழிபாட்டு கலாசாரங்களில் ஒன்றாகும். இந்த அடிப்படையில் உப்பும் காணிக்கை பொருளில் ஒன்றானது. தங்களுக்கு ஏற்படும் நோய்கள் குணமாகி விட்டால், அதற்கு நேர்த்திக்கடனாக உப்பை காணிக்கை கொடுக்கிறோம் என மக்கள் வழிபாடு செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்பு, கோவில் வளாகங்களுக்கு சென்று இரண்டு கைகளாலும் உப்பை, அள்ளி, அள்ளி சுவாமிக்கு படைத்தனர். இதோடு சுவாமிக்கு உப்பிடுவதால், மழைபெய்து, நன்றாக விளைந்து, தானியங்கள் பெருகி தன்னிறைவான உணவு கிடைக்கும் எனவும் நம்பினர்.
உப்புசுவாமி வழிபாடு: மடத்துக்குளம் தாலுகா வேடபட்டி கிராமம், மாரியம்மன் கோவில் வளாகத்தில் ‘உப்புசாமி’ வழிபாடு உள்ளது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், ‘வலிகள், உடலில் ஏற்படும் மருகு மற்றும் கட்டிகள் குணமாக, இங்குள்ள உப்புசாமியிடம் மக்கள் வேண்டிக்கொள்கின்றனர். நேர்த்திக்கடனாக உப்பு காணிக்கை கொடுக்கப்படுகிறது’ என்றனர்.