உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலுக்கு புதிய யானை வருவதில்... சிக்கல்!

திருத்தணி கோவிலுக்கு புதிய யானை வருவதில்... சிக்கல்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கென வாங்கிய யானை, இதுவரை கொண்டு வரப்படாமல் உள்ளது. இதற்கு, வனத்துறை அனுமதி சான்று கிடைக்காதது தான் காரணம் என, கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருத்தணி முருகனுக்கு, இந்திரன் தன் ஐராவதம் யானையை, திருமண சீதனமாக வழங்கியதாக ஐதீகம். இதனால், முருகனை தரிசித்த பின், யானையிடம் பக்தர்கள் ஆசீர்வாதம் பெற்று வந்தனர்.

முருகன் கோவிலுக்கு, 1982ம் ஆண்டு, திரைப்பட தயாரிப்பாளர், சின்னப்ப தேவர், வள்ளி யானையை வழங்கினார். உற்சவர் வீதியுலா, தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருவிழா போன்ற சமயத்தில், திருத்தணி நகர வீதிகளில் உற்சவர் முருகப் பெருமானுடன், வள்ளி யானை வலம் வந்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கும். இந்த யானை, 2010, நவ., 29ம் தேதி, உடல் நலக்குறைவால் இறந்தது. அதன் பின், இதுவரை முருகன் கோவிலில் யானை இல்லாதது, பக்தர்களை மன வேதனையடை வைத்தது. இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், அசாம் மாநிலம் சென்று, 16 லட்சம் ரூபாய் செலவில், புதிய பெண் யானையை வாங்கினார். அந்த யானையை, திருத்தணி முருகன் கோவிலுக்கு தானமாக வழங்குவதாகவும் இருந்தார். ஆனால், மலைக்கோவிலில் யானை மண்டபம் இல்லாததால், தற்போது வரை, அசாமிலேயே யானையை வைத்து, அவரே பராமரிக்கிறார்.

இதுவரை பராமரிப்புக்கு மட்டும் 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.இதையடுத்து, கோவில் வளாகத்தில், புதிய மண்டபம் கட்டுவதற்கு கோவில் நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஓராண்டுக்கு முன், படாசெட்டி குளம் அருகில் புதிதாக மண்டபம் கட்டப்பட்டு, திறப்பு விழாவும் நடந்தது.ஆனால், கோவிலில் யானை நிறுத்துவதற்கான வனத்துறை அனுமதி சான்று, அத்துறையிடம் இருந்து இதுவரை வரவில்லை. இதனால், யானையை கோவிலுக்கு கொண்டு வர முடியவில்லை என, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

விரைவில் சான்று: முருகன் கோவிலுக்கு யானை வருவதற்கான அனுமதி கடிதத்தில், சில திருத்தங்கள் மற்றும் யானை மண்டபம் மாற்றிமைப்பு குறித்து கூறியிருந்தோம். அதையும் சீரமைத்து, கோவில் நிர்வாகம் சார்பில், அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த கடிதத்தை, சென்னையில் உள்ள வனத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன், விரைவில் கோவில் நிர்வாகத்திடம் சான்று வழங்கப்படும். -மாவட்ட வனத்துறை அதிகாரி.

வனத்துறையினர் தாமதம்: கடந்தாண்டு மாவட்ட வனத்துறையினரிடம், யானையை கொண்டு வர மண்டபத்தை ஆய்வு செய்து, சான்றிதழ் தரும்படி கடிதம் கொடுத்தோம். ஆறு மாதங்களுக்கு முன், வனத்துறையினர் ஆய்வு செய்து, மண்டபத்தை சற்று விரிவுப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தினர். அதன்படி விரிவுப்படுத்தி, ஐந்து மாதங்கள் ஆகிறது. ஆனால், மாவட்ட வனத்துறை இதுவரை சான்று வழங்கவில்லை. இதனால், யானையை கோவிலுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. -கோவில் அதிகாரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !