சதுரகிரியில் செப்.21 முதல் நவராத்திரி திருவிழா துவக்கம்
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற நவராத்திரி திருவிழா செப். 21 ல் காப்புக்கட்டுடன் துவங்கவுள்ளது. இம்மலையில் சுயம்புவாக எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம், சித்தர்களால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்கள் உள்ளன.
இங்கு ஆடி அமாவசை, தை அமாவாசை, சிவராத்திரி விழாக்கள் விமரிசையாக நடைபெறும். இவை அனைத்தும் சுவாமிகளுக்கான திருவிழாவாகும். இங்கு ஒரேயொரு பெண் தெய்வமாக தனி சன்னதியில் ஆனந்தவல்லியம்மன் எழுந்தருளியுள்ளார். அவருக்காக கொண்டாடப்படுவது நவராத்திரி திருவிழாவாகும். காப்புக்கட்டுடன் துவங்கி 10 நாட்கள் இத்திருவிழா நடைபெறும். இதில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அத்துடன் கொலுமண்டபத்தில் கொலுபஜனை வழிபாடும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும் இறுதிநாளில் அம்மன் அம்மன் மகிசாஷ்வர அரக்கனை அம்பு எய்து அழிக்கும் அம்புவிடுதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். இவ்விழாவுடன் சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். எனவே விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் கோயில் முழுவதும் கோலாகலமாக பக்தர்கள் நிறைந்து காணப்படும். பிரசித்தி பெற்ற இவ்விழா செப். 21 வியாழன் அன்று அதிகாலை 3 மணிக்கு காப்புக்கட்டு வைபவத்துடன் துவங்குகிறது. செப்.29 ல் சரஸ்வதிபூஜை வழிபாடும், செப்.30 ல் விஜயதசமி வழிபாடும், அன்று மதியம் 2 மணிக்கு அம்புவிடுதல் நிகழ்ச்சியும் யந்திரம் வழங்குதலும் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கான அழைப்பிதழ்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு கடந்த இருநாட்களாக வினியோகிக்கப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அறிவழகன், அறநிலையத்துறை அதிகாரிகள், ஏழூர் சாலியர் சமுதாயத்தினர் செய்துவருகின்றனர்.