உடன்கட்டை ஏறினார் சக்கையாதேவி; உடை, அணிகலன்கள் எரியாத அதிசயம்
நரிக்குடி: சிவகங்கை சீமையை 250 ஆண்டுகளுக்கு முன்பு மருதுபாண்டியர் சகோதரர்கள் ஆட்சி புரிந்து கொண்டிந்தனர். இவர்கள் நரிக்குடியில் வழிப்போக்கர்கள் தங்கி உணவருந்தி செல்ல சத்திரம் ஒன்று அமைத்திருந்தனர். அருப்புக்கோட்டை அருகே கோசுகுண்டு சக்கையன் , அவரது மனைவி சக்கையா தேவி இருவரும் பிள்ளை வரம் வேண்டி ராமேஸ்வரம் சென்று தங்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இவர்களோடு இவர்கள் வளர்த்த நாயும் வந்தது. நரிக்குடி அருகே வரும் போது இரவு நேரம் என்பதால் சத்திரத்தில் தங்கி, சாப்பிட்டு காலையில் செல்ல முடிவெடுத்து தங்கினர். அங்கிருந்த சில கயவர்கள் சக்கையா தேவியை அடைவதற்காக, சக்கையனை வேட்டைக்குச் செல்லலாம் என கூறி அருகிலுள்ள கொண்டையறுத்தான் ஊரணிக்கு அழைத்துச் சென்று கொன்று விட்டனர். இவர்களது நாய், சத்திரத்தில் இருந்த சக்கையா தேவியிடம் வந்து சக்கையன் இறந்த இடத்திற்கு அழைத்து சென்றது.இதன்பின் சக்கையா தேவி சிவகங்கையில் இருந்த மருது சகோதரர்களிடம் புகார் தெரிவித்தார். மருது சகோதரர்கள், நாகப்பன் என்பவரிடம் கயவர்களை கொல்லுமாறு கட்டளையிட்டார். அவரும் அனைவரையும் கொன்றார். அப்போது உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்ததால், சக்கையனை எரிக்கும் இடத்தில் தானும் தீயில் விழுந்து சாக வேண்டும் என மருது சகோதரர்களிடம் கூறினார். அவர்கள் தடுத்தும், நான் உண்மையான பத்தினியாக இருந்தால் என் உடல் மட்டும் எரிய வேண்டும், எனது உடை, அணிகலன்கள் எரியக் கூடாது எனக் கூறி சக்கையன் எரித்த இடத்திலேயே தானும் தீயில் பாய்ந்து இறந்தார். அப்போது இவர்கள் வளர்த்த நாயும் தீயில் பாய்ந்து இறந்தது.
சக்கையாதேவி கூறியபடியே அவரது சேலை , கருகமணி உள்ளிட்டவை எரியவில்லை. மருது சகோதரர்கள் அவற்றினை சேகரித்து , பெட்டியில் வைத்து , நரிக்குடியில் இருந்த ராணி மீனாட்சியிடம் கொடுத்தார். ராணி பெட்டியினை அவரது வாரிசுகளிடம் கொடுத்து வழிபடச் சொன்னார். அதன் படி அவரது வாரிசுகள் இன்று வரை பெட்டியை வழிபட்டு வருகின்றனர். மேலும் சத்திரம் அருகே சக்கையா தேவிக்கு பீடம் அமைத்து , தீப்பாய்ந்தம்மன் பெயிரிட்டும் வழிபட்டு வருகின்றனர்.