திருவாசகம் முற்றோதல் விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில், பெரிய நாயகி உடனுறை பொன்மலை நாதர் கோவிலில், திருவாசக முற்றோதல் திருவிழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில், பாடல் பெற்ற ஸ்தலமான பெரியநாயகி உடனுறை பொன்மலைநாதர் கோவில் உள்ளது. இங்கு, கடந்த, 16 இரவு, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் முற்றோதல் விழா, நடராஜ பெருமான் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமி வீதி உலாவுடன் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு, ஆலய வளாகத்தில், திருவாசக சித்தர் தாமோதரன் தலைமையில், சிவனடியார்கள் குழுவினரால், 51 பதிகம் கொண்ட, 658 திருவாசக பாடல்கள் பாட ஆரம்பிக்கப்பட்டு, மாலை, 5:00 மணி வரை தொடர்ச்சியாக பாடப்பட்டது. இதில், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, மனமுருகி பாடி, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, தேவிகாபுரம் சிவனடியார் திருகூட்டம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.