திருப்பதி பிரம்மோற்சவம்: செப்., 21ல் திருக்குடை புறப்பாடு
சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில், செப்., 21ம் தேதி சிறப்பு பூஜைகளுடன், திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவங்குகிறது. திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு, தமிழகத்தில் இருந்து, ஆண்டுதோறும், இரண்டு மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று, ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர்மாலை; மற்றொன்று, 150 ஆண்டு களாக, சென்னையில் இருந்து பாரம்பரியமான திருக்குடை சமர்ப்பித்தல். ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் தரப்பில் கூறியதாவது: திருப்பதி கருட சேவை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பில், இந்தாண்டு, டிரஸ்ட் சார்பில், 11 வெண்பட்டுத் திருக்குடைகள், சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகின்றன. சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து, செப்., 21ம் தேதி காலை, 10:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்குடை ஊர்வலம் துவங்குகிறது. இந்த ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக, மாலை, 4:00 மணிக்கு, யானை கவுனி தாண்டுகிறது. செப்., 26ல் திருமலை சென்றடைகிறது.வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கை, திருக்குடை ஊர்வலத்தில் ஏற்க மாட்டோம். திருக்குடை தொடர்பாக, கட்டணமும் தர வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.