உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.25 லட்சத்தில் தங்கும் விடுதி

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.25 லட்சத்தில் தங்கும் விடுதி

கடையநல்லூர்:ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.25 லட்சம் செலவில் தங்கும் விடுதி அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் நேற்று கடையநல்லூரில் கூறியதாவது:-நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. இந்த தேர்தலில் திமுக டெபாசிட் தொகையை இழக்கும் வகையில் அதிமுகவின் தேர்தல் களம் காணப்படும். தமிழகத்தில் 39 இடங்களில் நவீன ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், பாவூர்சத்திரம், வள்ளியூர் ஆகிய மூன்று இடங்களில் சுமார் 5 கோடி ரூபாய் செலவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படவுள்ளது. இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் பல ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு பெரும் பலனாக அமையும்.தமிழகத்தில் அமைந்துள்ள பாரம்பரிய மிக்க திருத்தலங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முதல்வர் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தென்மாவட்ட மக்களால் திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு அடுத்தபடியாக அதிகமான அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படும் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 25 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் விடுதி அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் அமைக்கப்படவுள்ள தங்கும் விடுதியால் பக்தர்கள் பெருமளவில் பயன் பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைத்திட உத்தரவிட்டுள்ள முதல்வருக்கு அமைச்சர் செந்தூர்பாண்டியன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், ஆயக்குடி டவுன் பஞ்.,தலைவர் குட்டியம்மாள், பேரூர் செயலாளர் முத்துக்குட்டி மற்றும் ஆய்க்குடி டவுன் பஞ்., அதிமுக கவுன்சிலர்கள், முருக பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !