மகாளய அமாவாசை முன்னிட்டு சேலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
 சேலம்: சேலத்தில், மகாளய அமாவாசையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் நீர்நிலைகளில் தங்களின் முன்னோர்களுக்கு, நேற்று தர்ப்பணம் கொடுத்தனர். சேலம், சுகவனேஸ்வரர் கோவிலுக்கு, ஏராளமான மக்கள் நேற்று அதிகாலை வந்தனர். அவர்கள் தங்களை விட்டு பிரிந்த முன்னோர்களுக்கு எள், அரிசி மாவு, அகத்திக்கீரை, காய்கறிகள், தின்பண்டங்கள், வாழைப்பழம், தேங்காய், பூ, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை படைத்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் மேட்டூர், பவானி, கல்வடங்கம், பூலாம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. அமாவாசையையொட்டி கோட்டை மாரியம்மன், எல்லை பிடாரியம்மன், மேச்சேரி காளியம்மன், செங்குந்தர் மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன்-காளியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
* மகாளய அமாவாசையொட்டி, வசிஷ்ட நதிக்கரையில் ஏராளமானோர், தங்கள் முன்னோர்களுக்கு நேற்று தர்ப்பணம் கொடுத்தனர். பேளூர் மற்றும் ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரையையொட்டிய பகுதிகளில், இறந்த தங்களின் முன்னோர்களுக்காக, தர்ப்பணம் கொடுக்க அதிகாலையிலேயே ஏராளமானோர் சென்றனர். அங்கு, புரோகிதர் முன்னிலையில், காய்கறி, அரிசி, பழவகைகள், அகத்திக் கீரை ஆகியவற்றை படையல் வைத்து தர்ப்பணம் செய்தனர். பின், அவர்களிடம் ஆசி பெற்றனர்.