புஷ்கர விழாவை முன்னிட்டு புதிய அஞ்சல் உறை வெளியீடு
கொடுமுடி: புஷ்கர விழாவை சிறப்பிக்கும் வகையில், கொடுமுடியில், தபால் துறை சார்பில், அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. காவிரி மஹா புஷ்கர விழாவை முன்னிட்டு, மத்திய அரசின் தபால் துறை சார்பில், புதிய அஞ்சல் உறை அறிமுக விழா நேற்று மதியம், ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடந்தது. உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் சேதுமாதவன் தலைமை வகித்தார். கோவை, சேலம், ஈரோடு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சித்ராதேவி, உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் பட்டாபிராமன், பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர். விழாவில், 144 ஆண்டுகளுக்கு, ஒரு முறை நிகழும் முக்கிய நிகழ்வான, காவிரி மஹா புஷ்கர விழாவை சிறப்பிக்கும் வகையில், தபால் துறை சார்பில் அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. கோட்ட கண்காணிப்பாளர் சித்ராதேவி, அஞ்சல் உறையை வெளியிட, கொடுமுடி ஆதீனம் தண்டபாணி குருக்கள் பெற்றுக் கொண்டார். கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதி போஸ்ட் மாஸ்டர்கள், தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.