காரைக்காலில் காவிரி புஷ்கரம்: முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
காரைக்கால் : காரைக்காலில் நடந்த காவிரி புஷ்கரம் விழாவில், முதல்வர் நாராயணசாமி, ெஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியவை இணைந்து, திருநள்ளார் அகலங்கண்ணு பகுதியில் கடந்த 12ம் தேதி முதல், 24ம் தேதி வரை காவிரி புஷ்கரம் விழாவை நடத்துகின்றன.
காரைக்கால் மாவட்டத்தில், காவிரியின் ஏழு முக்கிய கிளை நதிகளான நண்டலாறு, நாட்டாறு, வாஞ்சியாறு, நூலாறு, அரிசிலாறு, திருமலைராஜனாறு மற்றும் பிரவடையனாறு ஆகியவை பாய்கின்றன. ஸப்தசிந்து, ஸப்த கோதாவரி என்பன போன்று இந்த ஏழு நதிகளும் ஸப்தகாவேரி என்று போற்றப்படுகின்றன.காரைக்காலில் நேற்று நடந்த காவிரி புஷ்கரம் விழாவில், தென்னங்குடி சவுந்தரசுவாமி மற்றும் நிரவி கரியமாணிக்கம் பெருமாள் ஆகியோர் தீர்த்தவாரியில் காட்சி அளித்தனர். சிறப்பு பூஜையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ெஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அமைச்சர் கமலக்கண்ணன், துணை சபநாயகர் சிவக்கொழுந்து, திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதின இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த ஸ்வாமிகள், எம்.எல்.ஏ.,க்கள் அசனா, கீதா ஆனந்தன், கலெக்டர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். காவேரி புஷ்கரம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.