உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி நவராத்திரி விழாவிற்கு வெளிநாட்டு பக்தர்கள் வருகை

பழநி நவராத்திரி விழாவிற்கு வெளிநாட்டு பக்தர்கள் வருகை

பழநி, 13ம் நுாற்றாண்டு முதல் கொண்டாடப்படும் பழநி நவராத்திரி விழாவை காண பிரிட்டன், மலேசியா, தாய்லாந்து பக்தர்கள் புலிப்பாணி ஆசிரமத்திற்கு வந்துள்ளனர். பழநியில் பல நுாற்றாண்டுகளாக நவாரத்திரிவிழா கொண்டாடப்படுகிறது. இதற்கு ஆதாரமாக 1399ம் ஆண்டில் புலிப்பாணி ஆசிரமத்திற்கான பட்டயச்சான்று உள்ளது.

இத்தகைய நவராத்திரிவிழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயில், உபகோயில்களில் இன்று (செப்.,21ல்) காப்புக் கட்டப்பட்டு ஒன்பது நாட்கள் (செப்.,30வரை) விழா நடக்கிறது. இந்தநாட்களில் தங்கரதப் புறப்பாடு நடைபெறாது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்.,30ல் விஜயதசமியை முன்னிட்டு, மலைக்கோயில் மலைக்கொழுந்து அம்மனிடம் பராசக்திவேல் வாங்கி, கோதை மங்கலத்தில் மகிசாசூரன் வதம் நடக்கிறது. இவ்விழாவை காண லண்டன் பக்தர்கள் புலிப்பாணி ஆசிரமத்திற்கு வந்துள்ளனர். ஆசிரம நிர்வாகி பன்னீர்செல்வம் கூறுகையில், ’சித்தர் போகர் நவபாஷாணத்தை பயன்படுத்தி தண்டாயுத பாணிசுவாமி சிலையை வடிவமைத்தார். அவர் வணங்கிய புவனேஸ்வரி அம்மனுக்கு பலநுாற்றாண்டுகளாக நவராத்திரிவிழா கொண்டாடப்படுகிறது. புலிப்பாணி பரம்பரையைச் சேர்ந்தவர்கள் விஜயதசமி நாளில் துர்க்கா வேடமிட்டு, கோதை மங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் மகிசாசூரனை வதம் செய்வர். இவ்விழாவை காண தற்போது லண்டன் பக்தர்கள் வந்துள்ளனர். மலேசியா, தாய்லாந்து பக்தர்களும் வருகின்றனர்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !