உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் நவராத்திரி விழா நிறைவு

சதுரகிரி மலையில் நவராத்திரி விழா நிறைவு

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நவராத்திரி திருவிழா அம்புவிடுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையில் திரண்டு வழிபட்டனர்.

சதுரகிரி மலையில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் நவராத்திரி திருவிழாவும் ஒன்று.  இங்கு ஒரேயொரு பெண் தெய்வமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆனந்தவல்லி அம்மனுக்காக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.   இந்த அம்மனுக்கு உருவம் கிடையாது.  எனவே சன்னதியில் உள்ள பீடத்திற்கு மட்டுமே வழிபாடு நடைபெறும்.  இத்திருவிழா கொண்டாடப்படும் நாட்களி்ல் மட்டுமே அம்மன் உருவமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.  இதனால் அம்மனை திருவிழா நாட்களில் தரிசனம் செய்ய தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மலைக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.  பலர் மலையிலேயே 10 நாட்களும் தங்கி விரதம் இருப்பார்கள்.  இறுதி நாளில் அம்மன் அம்பு எய்து மகிசாஷ்வர அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.  அதுமுடிந்தவுடன் பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதம் முடிப்பார்கள்.  பல்வேறு வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய இத்திருவிழா செப். 21 ல் காப்புக்கட்டுடன் துவங்கியது.   கரககுடத்தில் அம்மனை வடிவமைத்து சக்தி ஏற்றும் பூஜைகள் நடந்தது.  அதன்பின் அம்மன் சன்னதியில் உள்ள பீடத்தில் எழுந்தருளினார்.  தொடர்ந்து 9 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், வழிபாடும் நடந்தது.  இறுதி நாளான விஜயதசமி அன்று அம்மன் மகிசாஷ்வரவர்த்தினி அலங்காரத்தில் வில் அம்புடன் எழுந்தருளினார்.  காலையில் நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின் பெண்கள் முளைப்பாரியை கோயில்முன் வைத்து கும்மி வழிபாடு செய்தனர்.   

அம்மன் அருள்வாக்கு நடந்தபின் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று வழிபட்டனர். மதியம் 3 மணிக்கு அம்மன் மகிசாஷ்வர அரக்கனை அழிப்பதற்காக பக்தர்கள் புடைசூழ சன்னதியை விட்டு வெளியேறினார்.  பக்தர்கள் குலவையிட்டு அம்மனை வரவேற்றனர்.  பின்னர் ஊர்வலமாக சென்ற அம்மன் கோயில் வளாகத்தின் வெளியே வாழைமர உருவில் மறைந்திருந்த மகிசாஷ்வர அரக்கனை அம்புவிட்டு அழித்தார்.  மலையை சுற்றிலும் நின்ற பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியும்,  கைதட்டி, குலவையிட்டு ஆரவாரம் செய்தனர்.  வீழ்ந்த மகிசாஷ்வர அரக்கனை பக்தர்கள் கம்பால் அடித்து பரிகாரம் செய்தனர்.  மீண்டும் சன்னதிநோக்கி ஊர்வலமாக திரும்பிய அம்மன் மீது பக்தர்கள் பூக்களை துாவியும்,  பக்தர்கள் ரூபாய்நோட்டுகளை வீசியும்  வழிபட்டனர்.  இதனை தொடர்ந்து காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதம் முடித்தனர்.  அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.   அறநிலையத்துறை அதிகாரிகள், ஏழூர் சாலியர் சமுதாயத்தினர் திருவிழா ஏற்பாடுகளை செய்தனர்.  மலையில் மதுரை மாவட்ட போலீசாரும், அடிவாரத்தில் விருதுநகர் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !