உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலத்தில் அதிகரித்து வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம்!

குற்றாலத்தில் அதிகரித்து வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம்!

குற்றாலம் : குற்றாலத்தில் நாளுக்கு நாள் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து குறிப்பாக தென் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து அருவிகளில் புனித நீராடி விட்டு குற்றாலநாதரை தரிசனம் செய்வது வழக்கம். இதனால் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கி விடும். ஜனவரி இரண்டாவது வாரம் வரை ஐயப்ப பக்தர்களின் வருகை தொடரும். இந்த ஆண்டு வழக்கம் போல் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் இருந்தது. கடந்த சில நாட்களாக குமுளி, கம்பம் வழியாக சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் நெல்லை மாவட்டம் புளியரை வழியே செல்கின்றனர். இவ்வாறு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து அருவிகளில் புனித நீராடி குற்றாலநாதரை வழிபடுகின்றனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்களின் வருகை பன்மடங்காக அதிகரித்துள்ளது. அருவிகளிலும் தண்ணீர் வரத்து தாராளமாக இருப்பதால் ஐயப்ப பக்தர்கள் "சாமியே சரணம் ஐயப்பா என கோஷமிட்டு அருவிகளில் நீராடினர். இதனால் எப்போதும் அருவி பகுதியில் சரண கோஷம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக மெயின் அருவிக்கு செல்லும் பகுதியில் விபூதி, சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தும் ஐயப்ப பக்தர்களிடம் இரண்டு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !