சேரன்மகாதேவி கொழுந்துமாமலை கோயிலில் கார்த்திகை தீப விழா!
சேரன்மகாதேவி : சேரன்மகாதேவி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கொழுந்துமாமலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப விழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஹோமங்கள் நடந்தது. காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கொழுந்துமாமலை உச்சியில் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்கிட அண்ணாமலை, உண்ணாமலைநாதர் ஆகிய இரு தீபங்கள் ஏற்றப்பட்டு பாலசுப்பிரமணியனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தீப ஒளியை கண்டதும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி திருவிழாவை கொண்டாடினர். மாலை 6.30 மணிக்கு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீமத்வரசமயகோடாரிநாதன் சபையினர், விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.