திருக்கார்த்திகை: பழநி கோயிலில் பரணி தீபம்!
பழநி : பக்தர்களின் சரண கோஷத்துடன், பழநி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கே மலைக்கோயில் சன்னதி திறக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்சை நடந்தது. சின்னக்குமாரசுவாமி, தங்கமயில் மீது தீப ஸ்தம்பம் அருகே எழுந்தருளினார். மூலவர் சன்னதியில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு, உட்பிரகார நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மலைக்கோயில் தீப ஸ்தம்பத்தில், பக்தர்களின் சரணகோஷத்துடன் தீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, ரட்சை எடுத்து மூலவருக்கு திலகமிடப்பட்டது. தொடர்ந்து, திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மூலவருக்கு கார்த்திகை பொரி, அப்பம் நைவேத்யம் அளித்தனர். மலைக்கோயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க, பாதவிநாயகர் கோயில் அருகே படிப்பாதை அடைக்கப்பட்டது. வின்ச், ரோப்கார் இயக்கம், இரண்டு மணிநேரம் நிறுத்தப்பட்டது. வேணுகோபாலு எம்.எல்.ஏ., கோயில் துணை கமிஷனர் மங்கையர்கரசி, ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லச்சாமி, பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து பங்கேற்றனர்.