காசிவிஸ்வநாதர் கோயில் கந்தசஷ்டி விழாவில் திருவிளக்கு வழிபாடு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழாவில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. இக்கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா அக்.20 ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பெண்களால் திருப்புகழ், பஜனை வழிபாடு செய்யப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணைகள் நடந்தன. மாலையில் கலைவிழா துவங்கியது. நாமக்கல் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரம தலைவர் பூரண சேவானந்த மகராஜ் சுவாமிகள் விழாவை துவக்கி வைத்து அருளாசி வழங்கி பேசினார். வ.புதுப்பட்டி ராமகிருஷ்ணா ஆஸ்ரம நிறுவனர் சீனிவாச ரகுராஜன் தலைமை வகித்தார். கந்தசஷ்டி விழா அமைப்பாளர் கதிரேசன் வரவேற்றார். இரண்டாம் நாளில் பக்தி இன்னிசை கச்சேரியும், ஆதித்யா கல்யாணராமன் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் நாளில் ஹேமாசுஜாதா ஆன்மிக சொற்பொழிவு, சஷ்டிப்பாராயணம், நான்காம் நாளில் திருமுருக பஜனையும், மோகன் குழுவினர் பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது.ஐந்தாம்நாளில் முக்கிய நிகழ்வான திருவிளக்கு வழிபாடு நடந்தது. வழிபாட்டு குழு நிர்வாகிகள் குருபாக்கியம், அமர்ஜோதி, கீதா, தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலையில் பெண்கள் விளக்கு வழிபாடு செய்தனர். குடும்ப பிரச்சனைகள், திருமணத்தடை, உட்பட பல்வேறு பிரச்சனைகள் தீர பிரார்த்தனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.