பழநி கோயிலில் இன்று சூரசம்ஹாரம் : வின்ச் நிறுத்தம்
பழநி: பழநியில் இன்று சூரசம்ஹாரம் நடப்பதையொட்டி மதியம் மலைக்கோயில் நடை அடைக்கப்படுவதால், வின்ச் இயக்கம் காலையுடன் நிறுத்தப்படுகிறது. பழநி கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4:00 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு விளா பூஜை, படையல் நைவேத்தியம் நடக்கிறது. சூரசம்ஹாரத்திற்காக மதியம் 2:30 மணிக்கு, சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம்புரியும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கியவுடன், சன்னதி மதியம் 3:00 மணிக்கு நடைசாத்தப்படும். இதனால் இரவு 7 மணி தங்கரதப் புறப்பாடு கிடையாது.
வின்ச் நிறுத்தம்: மதியம் நடை அடைக்கப்படுவதால் பக்தர்களின் நெரிசலை தவிர்க்க காலை 10:00 மணிக்குமேல் வின்ச் இயக்குவது நிறுத்தப்படுகிறது. நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நான்குகிரி வீதிகளில் சூரன்கள் வதம் செய்யும் நிகழ்ச்சிக்காக அப்பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.