ராமநாதபுரம் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் அரோகரா கோஷம்
ராமநாதபுரம், ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் பெருவயல் பகுதியில் ஸ்ரீரணபலி முருகன் என்ற வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின் உள் பிரகாரத்தில் சுவாமி உலா வந்தார். நேற்று மாலை 4:30 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. பின் சூர சம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இன்று (அக்.26) காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சக்தி வேல் வழங்குதல் நிகழச்சி நடந்தது. அதனை தொடர்ந்து ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வாண வேடிக்கையுடன் நடந்தது.
வழிவிடு முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தினமும் இரவு சண்முக அர்ச்சனை
நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு பஞ்சாமிர்த வண்ணக் குழுவினரின் பாராயணம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சூர சம்ஹாரம் நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சுப்பிரமணியர் சன்னதியில் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றன. முன்னதாக பால், சந்தனம் ,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயில் சுப்பிரமணியர் சன்னதியிலும் கந்த சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிேஷக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாடானை: கந்த சஷ்டியை முன்னிட்டு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் முருகபெருமான் காட்சி யளித்தார். மஞ்சள், பால், பன்னீர்,பஞ்சாமிர்தம் போன்ற பல அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம்: கந்த சஷ்டி விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து முருகன் கேடயத்தில் புறப்பாடாகி சூரனை வதம் செய்தார்.
கந்த சஷ்டி விழா வையொட்டி, ராமேஸ்வரம் கோயிலில் உள்ள மேலவாசல் முருகன் சன்னதியில் தினமும் சிறப்பு அபிேஷகம், பூஜை நடந்தது. நேற்று கோயிலில் இருந்து கேடயத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் புறப்பாடாகி மேலரத வீதியில் எழுந்தருளினார். பின் அங்கிருந்த சூரனை வேல் மூலம் முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்தினார். விழாவில் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில் வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.