செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்
புதுச்சேரி: அரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு, கந்த சஷ்டியையொட்டி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமிக்கு, 3ம் ஆண்டு கந்த சஷ்டி மற்றும் திருக்கல்யாண விழா, கடந்த 20ம் தேதி துவங்கியது. மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் மூலம் கந்தர் சஷ்டி விரதம் துவக்கி வைக்கப்பட்டது. இதனையொட்டி, தினமும் சுப்ரமணிய சுவாமிக்கு, சம்ஹார வேல் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதன் 5ம் நாள் விழாவாக நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு அபிஷேக ஆராதனை, புலவர் கோவிந்தராசுவின் கந்தபுராணம் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மகா தீபாராதனை, அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று (25ம் தேதி) மாலை 3:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது.