உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை உள்ளிட்ட முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருக்கல்யாணத்துடன் நிறைவு

சென்னிமலை உள்ளிட்ட முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருக்கல்யாணத்துடன் நிறைவு

சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவத்துடன், கந்த சஷ்டி விழா நிறைவுக்கு வந்தது. சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி விழா, ஆகிய இரு விசேஷங்களுக்கு மட்டுமே, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளை, மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு, படிக்கட்டுகள் வழியாக அழைத்து செல்வது வழக்கம். விழா நிறைவு நாளில், மீண்டும் கைலாசநாதர் கோவிலுக்கு, சுவாமிகளை அழைத்து வந்து, திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும். அதன்படி கடந்த ஆறு நாட்களாக, முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது. இதற்காக உற்சவ மூர்த்தி சிலைகள், மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. கந்த சஷ்டி நிறைவு நாளான, நேற்று முன்தினம் இரவு, சூரசம்ஹார விழாவுக்காக உற்சவ மூர்த்திகள், அடிவாரம் கொண்டு வரப்பட்டன. சஷ்டி விழா நிறைவு நிகழ்ச்சியாக, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், நேற்று காலை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு, திருக்கல்யாண உற்சவம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

* திண்டல் வேலாயுதசாமி கோவிலில், திருக்கல்யாண வைபவம் நேற்று காலை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, யாகபூஜையுடன் நடத்தினர். தாலி கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு, வேலாயுதசுவாமி அருள்பாலித்தார். இதேபோல் கோபி பச்சமலை, பவளமலை, பெருந்துறை சோழீஸ்வரர், கொடுமுடி, சிவகிரி, புன்செய்புளியம்பட்டி சுப்பிரமணியர் கோவில்களில், சஷ்டி நிறைவு விழா, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !