கார்த்திகை தீப அகல் விளக்கு உற்பத்தி தீவிரம்
அதியமான்கோட்டை: கார்த்திகை தீப விழாவுக்காக, அகல் விளக்கு தயாரிக்கும் பணியில், தர்மபுரி மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கார்த்திகை தீப திருவிழா உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, பொதுமக்கள் கொண்டாடினர். தற்போது, நாகரீக மோகத்தால், பலர் பீங்கான் விளக்கு மற்றும் தீப வடிவில் ஆனா மெழுகுவர்த்திகளில் தீபம் ஏற்றி வருகின்றனர். இதனால், மண் அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இன்னும் பலர், பழமை மாறாமல், களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கில் தீபம் ஏற்றி, வழிபட்டு வருகின்றனர். இதனால், களி மண்ணில் அகல் விளக்கு செய்யும் பணியில், தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள், ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அகல் விளக்கு தயாரிக்கும், அதியமான்கோட்டையை சேர்ந்த செல்வம் கூறியதாவது: கார்த்திகை தீப விழா என்றால், பழமை மாறாமல், களி மண்ணால் ஆன அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, வழிபட்டு பக்தர்களால், எங்களின் மண்பாண்ட தொழில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல், இந்தாண்டும், 50 முதல், 250 மில்லி வரை கொள்ளளவு கொண்ட அகல் விளக்கு தயார் செய்ய, வியாபாரிகளிடம் இருந்து ஆர்டர் வந்துள்ளது. இதனால், அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பருவமழையால், கார்த்திகை விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு, எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். பருவமழை காலத்தில் பாதிக்கப்படும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.