உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலிங்க வடிவில் குபேரன்

சிவலிங்க வடிவில் குபேரன்

செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கு குஜராத் மாநிலம் வடோதராவிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள கர்னாளி என்ற கிராமத்தில் கோயில் உள்ளது. இது திரேதாயுகக் காலத்துக் கோயில் என்றும், பாரதநாட்டின் புராதனம் மிக்க குபேரன் கோயில் இது மட்டுமே என்றும் கூறுகிறார்கள். குபேரன், யட்சர்களின் அரசன். வடநாட்டில் இவன் ராவணனுக்கு அண்ணன் முறையாம். பேரனான விஷ்ரவா என்பவனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்குப் பிறந்தவன்தான் குபேரன். இரண்டாவது மனைவி, அசுரனின் புதல்வி. இவளுக்கு நான்கு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். பிள்ளைகள் ராவணன், கும்பர்கணன், விபீஷணன், கும்பாஷினி. புதல்வி சூர்ப்பணகை.

பவுலஸ்யர், தன் பேரன் குபேரனுக்கு மகுடம் சூட்டி வைத்தது மாற்றாந்தாய் மைந்தனான ராவணனுக்குப் பிடிக்கவில்லை. தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி, தவம் செய்ய ஆரம்பித்தான்.  பரமசிவனை மகிழ்வித்து, அவர் கொடுத்த வரத்தின் ஆற்றலால் குபேரனைத் தோற்கடித்து, பொன்நகரமான இலங்கையையும், குபேரனுக்கு இந்திரன் கொடுத்திருந்த புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினான். பாதிக்கப்பட்ட குபேரன் நாரதரின் ஆலோசனைப்படி கடுந்தவம் செய்து, சிவபிரானை மகிழ்வித்து, வரங்கள் பெற்றான். சிவபெருமான் அவனை தேவர்களின் செல்வத்தைப் பொறுப்புடன் கவனிக்கும் பொக்கிஷதாரனாக்கினார். குபேரன் அதோடு திருப்தியடையாமல், சிவபெருமான் தன்னுடனேயே இருக்க வேண்டும் என வரம் கேட்டான். சிவனும் அவன் வேண்டுகோளுக்கு இணங்கி அவனை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியமும், தனபாக்கியமும் கொடுக்கும் வரத்தை அளித்தார். அதன் பின்னரும் ராவணணின் அச்சுறுத்தல் தொடரவே, குபேரன் அம்பாளை நோக்கித் தவம் செய்து, ராவணனிடமிருந்து தப்பிக்க தேவியின் பாதுகாப்பைப் பெற்றான்!.

குபேரன் தேவியை தரிசித்த அந்த இடம் தான், குபேரன் கோயிலிருக்கும் கர்னாளி என்ற இடம். அபூர்வமான மகத்துவம் வாய்ந்த இத்தலத்தில், குபேரனை தரிசிக்க அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கூடுகிறார்கள். இந்தக் கோயிலில் குபேரனுடைய விக்ரகமோ, படமோ இல்லை சிவலிங்கம் மட்டுமேயிருக்கிறது. கர்ப்பகிருகத்தின் சுவரில் அம்பிகையின் விக்ரகமிருக்கிறது. பிரகாரத்தில், ஆஞ்சநேயர் பஹுசரா அம்மன் மற்றும் விநாயகர் காட்சியும் கிடைக்கிறது. சிவனோடு குபேரன் இணைந்திருப்பதால் குபேரனின் அருளோடு சிவபிரான் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !