உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

வத்திராயிருப்பு:கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

இக்கோயில் திருவிழா நவ.1 ல் துவங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் கலைவிழா நடந்தது. இறுதி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் அம்மன் தேரில் எழுந்தருள, சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ரதவீதிகள் வழியே தேர் சென்றது. மாவிளக்கு எடுத்தும், பழங்களை சூறையிட்டும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தேர் நிலைக்கு வந்தபோது அம்மனை பக்தர்கள் எதிர் சேவை செய்து வரவேற்றனர். இதன்பின் தேரில் இருந்த அம்மனை ஊர்வலமாக அழைத்து கோயிலுக்குள் எழுந்தருளச் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரியாவிடை நிகழ்ச்சி பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றியும், மண் பொம்மைகள், கலயம் ஊர்வலமாக சுமந்து சென்று கோயிலில் செலுத்தி வழிபடமஞ்சள் நீராட்டு நடந்தது. அம்மன் முதல்நாள் இரவு தோன்றி மறுநாள் இரவு மறைபவர். எனவே அம்மனை ஆற்றுநீரில் கரைப்பதற்காக கொண்டு செல்லும் ’பிரியாவிடை’ நிகழ்ச்சி நடந்தது. அம்மன் கோயிலை மூன்றுமுறை சுற்றி வர, பக்தர்கள் கோயிலைச்சுற்றிலும் திரண்டு நின்று பூக்களை துாவி, குலவையிட்டு அம்மனை வழியனுப்பி வைத்தனர். இவ்விழாக்களில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர், அரசுப்பணியாளர், ஓய்வுபெற்றோர் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !