ஹரிஹரன் இசை விழா: சாய் பக்தர்கள் பங்கேற்பு
குன்னுார் :’வாழ்க்கையில் சோதனைகளை வேதனைகளாக எடுத்துக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னுார் - ஊட்டி சாலையில், எல்லநள்ளி பிக்கட்டி அருகே அமைந்துள்ள சாய் கைலாஷ் கோவிலில், புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின், 92வது பிறந்தநாள் வரும், 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி கடந்த, 11,12 தேதிகளில், 24 மணி நேர அகண்ட நாம பஜனை நடத்தப்பட்டது. நேற்று, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.அதில், நீலகிரி மாவட்ட சத்யசாய் சமிதி மாணவ, மாணவியரின் படுக பாடல் நடனத்துடன் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அவர்களுடன் படுகர் இன பாரம்பரிய கலாசார உடையை அணிந்து, பிரபல பாடகர் பத்மஸ்ரீ ஹரிஹரன் நடனமாடினார்.
தொடர்ந்து, ஹரிஹரனின் சிறப்பு பஜனை, பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது. சத்ய சாய்பாபாவின் பாடல்கள், கிருஷ்ணர் உட்பட சர்வ மத பக்தி பாடல்களையும் பாடினார். இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட சத்யசாய் சேவா சமிதிகளின் சார்பில், மாவட்ட தலைவர் டாக்டர் ராமு பேசுகையில், ”பகவான் நமக்கு வாய்ப்புகள் பல கொடுக்கிறார். அதனை நாம் பயன்படுத்திகொள்ள வேண்டும். பகவானால், அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க முடியும்,” என்றார். மதுரை சத்ய சாய் சேவா சமிதி நிறுவன தலைவர் சுப்ரமணியம் பேசுகையில், ”மக்களிடம் அதிகம் அன்பு செலுத்துவதையே சாய்பாபா குறிக்கோளாக கொண்டார். வாழ்க்கையில் சோதனைகளை வேதனைகளாக எடுத்து கொள்ளாமல் நம்பிக்கையுடன் ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள வேண்டும்,” என்றார்.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 23ம் தேதி பாபாவின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.