கோவில் பணியாளர்கள் குறைவு கண்காணிப்பு பணி மெத்தனம்
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், போதிய பணியாளர்கள் இல்லாததால், நிர்வாக பணி மற்றும் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன. தமிழகத்தில், தொன்மையான ஆன்மிக நகரங்களில் ஒன்றாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது. இங்குள்ள வேதகிரீஸ்வரர் கோவில், பல்லவர்களின் பொக்கிஷமாக, ஒற்றைகல்லில் அமைந்துள்ளது.
பணிகள் முடக்கம்: மலைக்கோவில் கீழே, தாழக்கோவிலான பக்தவத்லேஸ்வரர் கோவில், நான்கு ராஜகோபுரங்களுடன் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. மேலும், 12 ஏக்கர் சங்கு தீர்த்த குளம் உள்ளது. வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், திருவடிசூலம், ஒரகடம், ஆமூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களும் நிர்வகிக்கப்படுகிறது.தற்போது, கோவில் செயல் அலுவலர் உட்பட, 20க்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர். இதன் காரணமாக கோவில் வருவாய் ஈட்டமுடியாத சூழல் உருவாகிறது. கோவில் நிலங்கள், கட்டடங்கள் கண்காணிப்பு, வரி வசூல், கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்தல் போன்ற பணிகள் முடங்கியுள்ளன. பல வணிக கடைகள், வரி செலுத்தாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமூக விரோத செயல்கள்: பணியாளர்கள் பற்றாக்குறையால், மலைக்கோவில், தாழக்கோவில், சங்குதீர்த்த குளம் உள்ளிட்ட இடங்களில், பக்தர்கள் போர்வையில் வரும் காதல் ஜோடிகள் உட்பட பலர், சமூக விரோத செயல்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்து அறநிலைய துறை அதிகாரிகள், இதற்கு தீர்வு வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.