பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திருக்கார்த்திகை
ADDED :2901 days ago
முருகப்பெருமான், தன்னை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு நன்றி செலுத்தும் நாள் திருக்கார்த்திகை. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அவை கங்கையில் இருந்த ஆறு தாமரைகளில் அமர்ந்து ஆறு குழந்தைகளாக மாறின. அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு, கார்த்திகை பெண்கள் ஆறுபேருக்கு கிடைத்தது. இதனால் நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர். இந்த நட்சத்திர நாளில்தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத் திரத்தில் விரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து, நமக்கு உதவியவர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.