நாயக்கர் கால சதிகல் ஆரணியில் கண்டுபிடிப்பு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில், 18ம் நுாற்றாண்டை சேர்ந்த சதிகல்லை, தொல்லியல் ஆய்வாளர், பிரியா கிருஷ்ணன் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கணவன் இறந்ததும் மனைவி உடன் கட்டை ஏறும் பழக்கம், இதற்கு, சதி என்று பெயர். அவ்வாறு உடன்கட்டை ஏறிய பெண்களின் கற்பை போற்றும் வகையில், அவர்களின் உருவத்துடன் அமைக்கப்பட்ட கற்களுக்கு, சதி கற்கள் என்று பெயர். ஆரணி, பெரியபாளையம் செல்லும் வழியில், லட்சுமி நாராயண சுவாமி, நாகாத்தம்மன் கோயில் உள்ளது. அங்குள்ள சிலைகளுடன், அரச மரத்தின் பின்புறம், மூன்றடி சதி கல்லும் உள்ளது. இதில், தாடியுடன் உள்ள வீரன் ஒருவன், தன் கையில் வாளும், இடையில் குறுவாளும் ஏந்தி உள்ளான். அவன் இருபுறமும், இரு மனைவியர் உள்ளனர். அவர்கள், காதணி, கழுத்தணியுடன், கையில் அல்லி மலர் ஏந்தி உள்ளனர். நாயக்கர் கால கலை அம்சத்துடன் உள்ள இந்த சிற்பம், மிக நேர்த்தியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.