திருமூர்த்திமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை
உடுமலை;உடுமலை அருகே, மேற்குதொடர்ச்சிமலையடிவாரத்தில், திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இங்கு, சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் குடிகொண்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு, தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அது மட்டுமில்லாமல், அருகில் திருமூர்த்திஅணை, பஞ்சலிங்க அருவி போன்ற இடங்களும் அமைந்துள்ளதால் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. ஆண்டுதோறும், கார்த்திகை மாதத்தில், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள், திருமூர்த்திமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். கார்த்திகை மாதம் பிறந்து, சபரிமலை சீசன் ஆரம்பித்துள்ளதால், அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வரத்துவங்கியுள்ளனர். அருவியில் தண்ணீர்பெருக்கு அதிகரித்துள்ளதால், பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவில் அருகிலுள்ள பாலாற்றில் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று விடுமுறைதினம் என்பதால், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.