உடுமலை கோவிலில் 5 ஆயிரம் தீபம் ஏற்றி வழிபாடு
உடுமலை: உடுமலை, சக்திவிநாயகர் கோவிலில், திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, 5 ஆயிரம் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. கார்த்திகை மாதத்தில் வரும், கிருத்திகை நட்சத்திரத்தன்று தீப திருநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, உடுமலை சுற்றுவட்டாரத்திலுள்ள கோவில்களில் தீபத்திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன்படி, முத்தையா பிள்ளை லே-அவுட்டில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில், தொடர்ந்து மூன்று நாட்கள் வரை எரியும் வகையில், மெகா தீபம் ஏற்றப்பட்டது. அத்துடன் கோவில் வளாகத்தில் லிங்கம், சக்கரம், நட்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில், 5ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சிவன், முருகன், விநாயகர் மற்றும் அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது.குறிஞ்சேரி, ஆண்டாள் நாச்சியார் கோவிலிலும் அகல்விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு, பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. பக்தர்கள் சார்பில் நாராயணியம் பாராயணம் செய்யப்பட்டது.அத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், பழநியாண்டவர்நகர் செல்வவிநாயகர் கோவில், முத்தையா கந்தசாமி லே-அவுட் சித்திவிநாயகர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.