கோவிலுக்குள் பிரவேசிக்கும் சூரிய ஒளி: கரம் குவிப்போரை காக்கும் முத்துமாரி
வால்பாறை: மனக்குழப்பத்துக்கும், குடும்பப்பிரச்னைக்கும் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டால், விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். வால்பாறையிலுள்ள, முத்துமாரியம்மன் கோவிலுக்குள் இருக்கும் போது, எவ்வித தீவினைகளும் அண்டாது என்கின்றனர் பக்தர்கள். வால்பாறை நகரின் மையப்பகுதியில்அமைந்துள்ளது அண்ணாநகர். அங்குள்ள சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு அருகில் முத்துமாரியம்மன் கோவில், குடியிருப்புகள், தேயிலை தோட்டங்களுக்கு இடையே அழகாக அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற கோவிலில், விநாயகர், முருகன், முனுசாமி ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோவிலில் அம்மன், கிழக்கு முகமாக அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒரே கல்லில் வடிவம் கொண்டுள்ளார். காலையில் சூரிய ஒளி கோவிலினுள் பிரவேசித்து அம்மன் சிலையில் நேரடியாக படுவது கோவிலின் சிறப்பாகும்.
அம்மனின் அருளால், ஆண்டுதோறும் கோவில் திருவிழாவின் போது, பக்தர்கள் பூக்குண்டம் இறங்கியும், வேல் பூட்டியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மனமுருகி அம்மனை வழிபட்டால் நினைத்தகாரியம் கை கூடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இதனால், கோவிலுக்கு வேண்டுதலோடு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. வாரம்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனர். தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை நடக்கிறது. இது தவிர, அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி, கார்த்திகை, சிவராத்திரி, குரு மற்றும் சனிப்பெயர்ச்சி நாட்களில் சிறப்பு பூஜையும், பரிகாரபூஜையும் நடக்கிறது. முருக பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஆண்டுதோறும், அன்னதானம் வழங்கப்படுகிறது. சித்திரை மற்றும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நவராத்திரி விழா மிகவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.