காவல் தெய்வமாய் சப்த முனிகள்
மடத்துக்குளம்: கிராம காவல் தெய்வமான முனியை பல உருவங்களில் வணங்கும் சப்தமுனி கோவில் மடத்துக்குளம் அருகே உள்ளது.வழிபாடுகள் தொடங்கிய காலம் முதல், இருள், விலங்குகள், தீயசக்திகள் குறித்த அச்சம் மக்களிடையே இருந்தது. இந்த அச்சத்திலிருந்து, விடுபட பலவித காவல் தெய்வங்களை உருவாக்கி வணங்கத் தொடங்கினர். கிராமம் சார்ந்த பகுதியில் வசித்த மக்கள் கருப்பணசுவாமியையும், வனம் சார்ந்த மக்கள் முனி போன்ற தெய்வத்தை தங்களை பாதுகாக்கும் இறைசக்தியாக நம்பினர்.தீய சக்திகளை எதிர்த்து போராட மிகுந்த பலம் தேவை என்பதால், காவல் தெய்வங்களை சாதாரண மக்களை விட அதிக பலம் உள்ளதாக உருவகப்படுத்தினர். கட்டுமஸ்தான உடல், பிரமாண்ட உருவம், கைகளில் ஆயுதம், மிரட்டும் விழிகள், கோபம் பொங்கும் முகம் என இந்த தெய்வம் பார்ப்பவர்களை அச்சப்பட வைக்கும் தோற்றம் கொண்டதாக உருவாக்கப்பட்டது.
இந்த தோற்ற அமைப்பில் முனிகளுக்கு சிலைகள் உள்ளன.கிராமம் மற்றும் காடுகளில் மக்கள் வசித்த எல்லை பகுதியில் முனிகளுக்கு கோவில் அமைக்கப்பட்டது. பெரும்பாலும், இறைச்சியை, சமைத்து படையலிட்டு வணங்குவது பலகாலமாக பின்பற்றப்படுகிறது. சில கோவில்களில் சைவ படையலும் நடக்கிறது. பொதுவாக முனி என்பது ஒரு காவல்தெய்வமாகவே வழிபடுவார்கள். மடத்துக்குளம் அருகே சப்த முனிகளுக்கு கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.ஏழுமுனிகளின் சிலைகள் அமைக்கப்பட்டு, இதை சப்த முனி என குறிப்பிடுகின்றனர். பல தோற்றங்களில் உள்ள இந்த முனிகள், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் அம்சங்களாக குறிப்பிடப்படுவதோடு, சில முனிகள் பில்லி, சூனியம் அகற்றுவதாகவும், சில முனிகள் சகல ஐஸ்வர்யம் வழங்குவதாகவும் மக்கள் நம்புகின்றனர். அனைத்து முனி சிலைகளும் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளன. கையில் கத்தி,வேல், போன்ற ஆயதங்கள் உள்ளன. அப்பகுதி மக்கள் கூறுகையில், பல தலைமுறையாக சப்தமுனி வழிபாடு இங்கு நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவில் புதுப்பிக்கப்பட்டது, என்றனர்.மடத்துக்குளம் - கொமரலிங்கம் ரோட்டில், மேற்கு நீலம்பூர் பஸ்ஸ்டாப் அருகே ரோட்டோரம் இந்த கோவில் அமைந்துள்ளது.