வனபத்ரகாளியம்மன் கோவில் புதிய கட்டடங்கள் திறப்பு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவிலில், புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. கோவையில் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்தது. இதில், முதல்வர் பழனிசாமி, பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார். இத்துடன், மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில், ரூ.1.45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, அன்னக்கூடம், கழிப்பறைகள் மற்றும் கோவில் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார். வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் அலுவலக பயன்பாட்டுக்காக குத்து விளக்கேற்றினர். இந்த கட்டடங்கள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. பக்தர்கள் கூறுகையில், ’பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான ஒருசில அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, பக்தர்கள் அமர மண்டபம், கழிப்பறைகள் தற்போது ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி. இதேபோல், கோவிலை ஒட்டி செல்லும் ஆற்றின் ஆபத்தான பகுதிகளுக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க தேவையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்,’ என்றனர்.