தமிழகத்தின் 2வது விபூதி லிங்கம்: ஊத்துமலை குகையில் பிரதிஷ்டை!
சேலம்: தமிழகத்தின் இரண்டாவது, விபூதி லிங்கம், சேலம், ஊத்துமலை முருகன் கோவிலில் உள்ள குகையில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிரிவலப்பாதையில், உள்ள குகையில், சித்தர்கள் உருவாக்கிய விபூதி லிங்கம் உள்ளது. அதன் பாதுகாப்பு கருதி, பக்தர்கள் தரிசிக்கவும், வழிபாடு மேற் கொள்ளவும் அனுமதிக்கப்படுவது இல்லை. அந்த லிங்கத்தை போன்று, தமிழகத்தின் இரண்டாவது விபூதி லிங்கம், சேலம், ஊத்துமலை முருகன் கோவிலில் தயார் செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்வதற்காக, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து திருஞான சம்பந்த ஈசான சிவாச்சாரியார் கூறியதாவது: நோய் தீர்க்கும் அத்தனை சக்தியும் விபூதியில் உள்ளது. திருச்செந்தூரில், பன்னீர் இலையில் வழங்கப்படும் விடுதி, அனைத்து வகையான நோய்களையும் தீர்த்து வைக்கிறது. அதே போல், சித்தர்கள் வகுத்து கொடுத்த நெறிமுறைகளின் படி, விபூதியில் தயார் செய்யப்படும் சிவலிங்கம், ஆஸ்துமா, சோரியாசிஸ், காசநோய், மன அழுத்தம் உட்பட அனைத்து வகையான நோய்களையும் தீர்க்கும் சக்தியை கொண்டுள்ளது. இந்த லிங்கம், 15 கிலோ விபதியுடன், ரத்தினம், பவளம், மரகம், அன்ன சூரணம் உட்பட, 16 வகையான திரவியங்கள், மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றரை அடி உயரத்திலும், அரை அடி சுற்று வட்டத்தையும் கொண்ட லிங்கம், 16 கிலோ எடையை கொண்டுள்ளது. லிங்கத்துக்கான, அடிபீடம் தயாரிக்கும் பணிகள் முடிந்து விட்டது. குகையையும் தேர்வு செய்துள்ளோம். அதில், சில பணிகள் முடித்த பின், முறைப்படி பிரதிஷ்டை செய்ய உள்ளோம். அதற்கு முன்பாக, விபூதி லிங்கத்துக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. சித்தர்கள் ஏற்படுத்திக் கொடுத்த இந்த விபூதி லிங்கத்துக்கு, மாதம் தோறும் பெளர்ணமி நாளில் சிறப்பு பூஜை நடத்தப்பட உள்ளது. திருவண்ணாமலையில், விபூதி லிங்கம் உள்ள போதிலும், அதை பக்தர்களால் காணவோ, தரிசிக்கவோ முடிவது இல்லை. ஆனால், இங்கு விபூதி லிங்கத்தை வழிபட பக்தர்களுக்கு முழு அனுமதி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.