உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2,500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

2,500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 2,500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, காளிங்காவரம் பஞ்.,ல் உள்ள சின்னமடம்பள்ளியில், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்களை, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி ஆய்வு மாணவர்கள், கள ஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து, வரலாற்றுத் துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: இங்கு காணப்படும் ஓவியம், மனித இனத்தின் சூழலை சித்தரிப்பவையாக உள்ளன. அவர்களது எண்ணங்கள், நம்பிக்கைகளை பிரதிபலிப்பவையாகவும் உள்ளன. முதல் ஓவியம், இரு பாறைகளுக்கு இடையே உள்ள முகப்பு பகுதியில் உள்ளது. இது பிராமி ‘ய’ எழுத்தை ஒத்துள்ளது. மேலும், வட்ட வடிவம் கிடைக்கோட்டின் மீது, மூன்று குத்துக்கோடுகள் இடம் பெற்ற எழுத்து வடிவமும், ‘ஆ’ எழுத்து திரிபுருவுடனும் உள்ளது. ஆகையால், இந்த எழுத்துக்கள் சடங்கு மற்றும் வழிபாட்டின் எழுத்துக் குறியீடாக உள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது. மேலும், குகையின் உட்புறத்திலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவை கிடைமட்டக் கோட்டின் மீது, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டு குத்துக் கோடுகள் கொண்ட ஓவியம், பீடத்துடன் கூடிய படையல் கலன்கள் ஆகும். அதன் அருகில் ‘ப’ வடிவமும், புள்ளியும் கொண்ட குறியீடும் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியம், மூத்தோர் வழிபாட்டை குறிக்கிறது.   

அதேபோல், இரண்டாவது தொகுப்பில் உள்ள ஓவியத்தில், ஒரு வீரனின் உருவம் பெரியதாகவும், மற்றொருவன் சிறிய உருவத்துடனும் உள்ளனர். இந்த ஓவியம், பெரிய வீரனை வணங்கத் தீட்டப்பட்டது எனலாம். மூன்றாவது தொகுப்பில் உள்ள ஓவியங்கள் அக்கால மனிதன் நிகழ்த்திய வழிபாட்டு நிகழ்ச்சி பற்றி காட்டுகிறது.   இதில் உள்ள காட்சி அமைப்பில் உள்ள வளர்ச்சித் தன்மையை கொண்டு, இதை நடுகல் வழிபாட்டிற்கு முன்னோடியாகக் கருதலாம்.   இவ்வாறு அவர் கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !