மயிலை கபாலீஸ்வரருக்கு தங்க நாகாபரணம் சமர்ப்பிப்பு
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவில் மூலவருக்கு, 2.75 கோடி ரூபாய் மதிப்பில், 7.5 கிலோ தங்கத்தாலான, நாகாபரணம் சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை, மயிலாப்பூர் கோவிலில் உள்ள மூலவர் கபாலீஸ்வரருக்கு, சிறப்பு பூஜை செய்யப்படும் போது, செப்பில் தங்க முலாம் பூசிய, நாகாபரணம் சார்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மூலவருக்கு சொக்க தங்கத்தாலான நாகாபரணம் வழங்க, கோவில் தக்கார், விஜயகுமார் ரெட்டி, பிரீத்தி ரெட்டி ஆகியோர் முன்வந்தனர். இதையடுத்து, 2.75 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7.5 கிலோ எடையுள்ள நாகாபரணம், உம்மிடி பங்காரு ஸ்ரீ ஹரி சன்ஸ் மூலம் செய்து முடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, மயிலாப்பூருக்கு வருகை தந்த, காஞ்சி மடாதிபதிகள், ஜெயேந்திரர், விஜயேந்திரருக்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, கிழக்கு ராஜகோபுரம் வாசலில், பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை, 11:15 மணிக்கு, அலங்கார மண்டபத்தில், விநாயகர் பூஜை, புண்யாகவசனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 11:30 மணிக்கு, மூலவர் கபாலீஸ்வரருக்கு, தங்க நாகாபரணத்தை, ஜெயேந்திரர் சமர்ப்பித்தார். பின், மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் இணை கமிஷனர், காவேரி செய்திருந்தார்.