திருப்பூர் பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா
திருப்பூர் ;திருப்பூர், ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், வைகுண்ட ஏகாதசி, வரும், 18ல் துவங்குகிறது; முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, வரும், 29ல் நடக்கிறது. திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில்களில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 18ம் தேதி, இரவு, திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. 19ம் தேதி, பகல் பத்து உற்சவம் துவக்கம் மற்றும் திருமொழி திருநாள் விழா நடக்கிறது. 28ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, மோகினி அலங்காரணம், ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் திருவீதி உலா நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான, வைகுண்ட ஏகாதசி வரும், 29ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீ வீரராகவப் பெருமாளுக்கு, மகா அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை, 5:30க்கு, சொர்க்க வாசல் திறப்பு, சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளுதல் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. அன்றிரவு, 8:00 மணிக்கு, ராப்பத்து உற்சவம் துவக்கம், திருவாய் மொழி திருநாள் உற்சவம் நடக்கிறது. ஜன.,7ம் தேதி, ஆழ்வார் மோட்ஷம் , 11ம் தேதி, கூடாரை வெல்லும் சீர் உற்சவ விழா மற்றும் மாலை, 6:00, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ஆருத்ரா தரிசனம்: ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, வரும், 24ம் தேதி, இரவு, 7:00க்கு, மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, தினமும் திருவெம்பாவை உற்சவம் நடக்கிறது. ஜன.,1ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 2ம் தேதி அதிகாலை, 3:30க்கு, ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு, மகா அபிஷேகம் நடக்கிறது. 6:30 மணிக்கு, ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை, ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனமர் ஸ்ரீ நடராஜ பெருமாள் பட்டி சுற்றுதல் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. வரும், 3ம் தேதி, காலை, 10:00க்கு, வசந்த உற்சவம், மஞ்சள் நீர் விழா நடக்கிறது.