சபரிமலையில் பக்தர்கள் தங்கும் இடத்தில் நெய்யபிஷேகம் செய்ய ஏற்பாடு
சபரிமலை: நெய்யபிஷேகத்தில் இடைத்தரகர்களை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் தங்கும் இடங்களில் இருந்து தேவசம்போர்டு நியமிக்கும் ஊழியர்கள் அபிஷேகம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேவசம்போர்டு உறுப்பினர் ராகவன் கூறினார். இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் வரும் பக்தர்கள் முக்கியமாக நெய்யபிஷேகம் செய்வதற்காக பல இன்னல்களையும் பொருட்படுத்தாமல் இரவில் தங்குகின்றனர். இந்த பக்தர்களை இடைத்தரகர்கள் ஏமாற்றுவது உறுதி செய்யப்பட்டுஉள்ளது.
நெய்யபிஷேகம் செய்து தருவதாக கூறி, நெய் மற்றும் பணம் வாங்கி கொண்டு அபிஷேகம் செய்யாமலேயே திருப்பி கொடுத்து பணம் பறிக்கின்றனர். தேவசம்போர்டு நியமித்துள்ள தற்காலிக ஊழியர்களும், இடைத்தரகர்களாக மாறி வருகின்றனர்.இதை தவிர்க்க பக்தர்கள் தங்கும் கட்டடங்களில் தேவசம் போர்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு நெய்யபிஷேக டிக்கெட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நேரத்தில் இங்குள்ள ஊழியர்கள் சென்று அபிஷேகம் நடத்தி கொடுப்பர். இதன் மூலம் பக்தர்கள் ஏமாறுவது தடுக்கப்படுவதோடு, தேவசம்போர்டுக்கு ஏற்படும் வரும் வருமான இழப்பும் தவிர்க்கப்படும். மண்டல பூஜைக்கு முன்னதாக மீண்டும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி இந்த விஷயத்தில் கூடுதல் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.