உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் இன்று துவக்கம்

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் இன்று துவக்கம்

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, இன்று துவங்குகிறது. திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், மூலவர் அனுமதி பெறும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன், வைகுண்ட ஏகாதசி விழா இன்று துவங்குகிறது.

இரவு, 7:00 மணிக்கு மூலஸ்தானம் எதிரே உள்ள காயத்ரி மண்டபத்தில், அரையர்களும், பட்டாச்சார்யார்களும் மூலவர் அனுமதி பெற்று, நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை, அபிநயத்துடன் பாடத் துவங்குவதே திருநெடுந்தாண்டகம் எனப்படும்.நாளை முதல், 10 நாட்களுக்கு, பகல்பத்து உற்சவமும், சொர்க்கவாசல் திறப்பு தினமான, 29ம் தேதி முதல், ஜன., 8 வரை ராப்பத்து உற்சவமும் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் போது, அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.விழாவுக்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஸ்ரீவி.,யில் நாளை : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், ஆண்டு தோறும் மார்கழியில், பகல் பத்து, ராப்பத்து, எண்ணெய் காப்பு உற்சவங்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசி வைபவங்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு, நாளை துவங்கி, 2018 ஜன., 14 வரை, மார்கழி உற்சவங்கள் நடக்க உள்ளன. டிச., 29 வெள்ளிக்கிழமை, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு, பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் வேதவிண்ணப்பமாதல் நடக்கிறது. காலை, 7:05 மணிக்கு, பரமபதவாசல் திறக்கப்படுகிறது.ஜன., 7 - 14 வரை, ஆண்டாள் தினமும் சன்னதியில் இருந்து புறப்பட்டு, மாட வீதிகள் வழியாக, எண்ணெய் காப்பு மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு மதியம், எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !