காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா இன்று துவங்குகிறது.கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவிலாகும். மார்கழி மாதத்தை முன்னிட்டு, இங்கு உற்சவர் முன் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, சாற்றுமுறை ஆகியவற்றை சேவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து கோ பூஜை நடைபெறுகிறது. அதிகாலையில் தாசபளஞ்சிக மகாஜன பஜனை வழிபாட்டுக்குழு, சந்தான வேணுகோபால சுவாமி பஜனைக்குழு, திருமுருக பக்தர்கள் பஜனைக்குழு ஆகிய மூன்று குழுவினர், நான்கு ரதவீதிகளில் பஜனை பாடி, இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
பெண்கள், சிறுவர், சிறுமியர் மார்கழி குளிரையும் பொருட்படுத்தாது, நான்கு ரதவீதிகளில் அதிகாலை கோலமிட்டு குத்துவிளக்கு ஏற்றி, பஜனை குழுவினரை வரவேற்று வருகின்றனர். இதனால் காரமடை அரங்கநாதர் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள், காலையில் விழாக்கோலம் பூண்டுள்ளன. காரமடை கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, இன்று திருமொழித் திருநாள் தொடக்கத்துடன் பகல் பத்து உற்சவத்துடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி இரவு, 8:00 மணிக்கு அரங்கநாத பெருமாள் மோகினி அவதாரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 29ம் தேதி காலை, 5:45 மணிக்கு வைகுண்ட ஏகாதசி எனும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று இரவு, 10:00 மணிக்கு திருவாய் மொழித் திருநாள் எனும் ராப்பத்து உற்சவம் துவங்கிறது. ஜன., 5ம் தேதி இரவு, அரங்கநாதப்பெருமாள் குதிரை வாகனத்தில் உற்சவமும் நடக்கிறது. 7ம் தேதி இரவு 9:30 மணிக்கு விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.