ஆறில் இது தான் அழகானது!
ராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு பகுதிகள் உள்ளன. இதில் சுந்தர காண்டமே மிகவும் புகழ் பெற்றது. சுந்தரம் என்றால் அழகு. ராமனுக்காக சீதையை, அனுமன் தேடித்தந்த படலம் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது. ராம பக்தர்களில் சிறந்தவன் அனுமன். அவர் ராம சேவைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டதும் இக்காண்டத்தில் தான். இதில் தான், வெற்றி நாயகன் ராமன் வந்து கொண்டிருக்கிறான் என்னும் சுபச் செய்தியை அசோக வனத்தில் சீதை கேட்டு மகிழ்ந்தாள். சொல்லின் செல்வன் அனுமன் என்ற பெருமையை அனுமன் நிலை நாட்டியதும் சுந்தர காண்டத்தில் தான்.
நல்லவருக்கு நேர்ந்த கொடுமை
மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று அறை கூவல் விடுத்தார் இயேசுநாதர். அவர் மக்களின் நோய்களைக் குணமாக்கினார். இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார். அற்புதங்களை செய்ததால், அவரது புகழ் வளர்ந்தது. இது மத குருக்களுக்கு பிடிக்கவில்லை. ரோமப் பேரரசிடம் அவரை பற்றி அவதூறு வழக்கு தொடர்ந்தனர். அவரை அரசிடம் ஒப்படைப்பதற்காக, இயேசுவின் சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத் என்ற சீடனை மதகுருக்கள் அணுகினர். 30 வெள்ளிக்காசு கூலியாக தரப்பட்டது. அவன் சமயம் பார்த்து காத்திருந்தான். இவ்வாறு நடக்குமென இயேசு முன்கூட்டியே அறிந்திருந்தார். தன் சீடர்களிடம், “உங்களில் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான். அதனால் நான் உயிர் துறப்பேன். இருப்பினும் நீங்கள் கலங்க வேண்டாம். மரித்த மூன்றாம் நாளில் நான் உயிர்த் தெழுவேன்,” என்றார்.
இந்த சமயத்தில் பஸ்கா பண்டிகை வந்தது. அன்று இயேசு தன் சீடர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு ரொட்டியை சிறுசிறு துண்டாக்கி கொடுத்தார். “இது என் சரீரமாயி ருக்கிறது. நான் இந்த உலகிற்கு மீண்டும் வரும் வரையிலும், என்னை நினைவு கூரும்படி இதை உண்ணுங்கள்,” என்றார். பின்பு ஒரு கிண்ணத்தில் திராட்சை ரசம் ஊற்றி, “என்னுடைய ரத்தத்துக்கு அடையாளமாக நான் வரும் வரையிலும், இதைப் பருகுங்கள்,” என்றார். அப்போது யூதாசும் அங்கு இருந்தான். இயேசு கொடுத்ததை சாப்பிட்டு விட்டு, அவர் இன்ன இடத்தில் இருக்கிறார் என்பதை சொல்லிக் கொடுக்க வெளியே சென்றான். பண்டிகை முடிந்து, இயேசு கெத்சமனே தோட்டத்துக்கு சென்றார். அங்கு யூதாஸ், ரோமப் பேரரசின் மன்னன் பிலாத்தை அழைத்து வந்தான். அவன் இயேசுவிடம் விசாரணை நடத்தினான். விசாரணையில் அவர் மீது குற்றம் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் மத குருக்கள் விடாப்பிடியாக அவர் மீது குற்றம் சுமத்தி, சிலுவையில் அறைந்து கொல்லும்படி வற்புறுத்தினர். இயேசு கொல்கதா என்ற மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிலுவையில் அறையப் பட்டார். முள் கீரிடம் சூட்டப்பட்டது. அவர் மரித்தார்.