ஆண்டு முழுவதும் ஆனந்தம்!
இந்த, 2018ம் ஆண்டின் கூட்டுத்தொகை, 2; இந்த எண்ணுக்குரிய கிரகம் சந்திரன். இவர் வழிபட்ட மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமளரங்கநாதரை, புத்தாண்டை ஒட்டி தரிசிப்போம்.
மது, கைடபர் எனும் அரக்கர்கள், பிரம்மாவிடமிருந்து வேதங்களை திருடிச் சென்றனர்; அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு, அவற்றை மீட்டு வந்தார். அசுரர்களின் பிடியில் இருந்ததால், தங்களுக்கு உண்டான தோஷத்தை நீக்கும்படி, மகாவிஷ்ணுவை வேண்டின, வேதங்கள். வேதங்களின் வேண்டு தலை ஏற்ற சுவாமி, அதற்கு பரிமளம் (புனிதமாக்குதல்) தந்தார். இதனால், இவர், பரிமளரங்கர் என, பெயர் பெற்றார்.
காவிரிக்கரையிலுள்ள இக்கோவிலில், சுவாமி பள்ளி கொண்ட கோலத்தில் அருளுகிறார். இத்த தலம் தவிர, மைசூரு அருகிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டணம், திருச்சி ஸ்ரீரங்கம், கோயிலடி மற்றும் கும்பகோணம் ஆகிய தலங்களிலும், சுவாமி, காவிரிக்கரையில் பள்ளி கொண்டிருக்கிறார்.
இந்த ஐந்து தலங்களும், பஞ்சரங்கம் என்றழைக்கப்படுகின்றன; இதில் ஐந்தாவது தலம் இது. இங்கு சுவாமியை தரிசித்தால், பிற நான்கு தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பஞ்ச ரங்க தலங்களில், இங்கு மட்டுமே சுவாமி, நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் என்பது மற்றொரு சிறப்பு. தாயார் சுகந்தவல்லி நாயகி எனும் திருநாமத்துடன் விளங்குகிறார்.
சந்திர வழிபாடு: தட்சனின் மகள்களான, 27 நட்சத்திர தேவதைகளை சந்திரன் மணந்தார். ஆனால், ரோகிணி மீது மட்டும் அன்பு செலுத்தினார். இதையறிந்த தட்சன், க்ஷய ரோகம் பிடிக்கும்படி சபித்தார். இதற்கு நிவர்த்தி வேண்டி, இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வேண்டினார். காட்சி தந்த சுவாமி, நோயைக் குணமாக்கினார்.சந்திரனுக்கு, இந்து என்றும் பெயருண்டு. இதனால், இத்தலம், இந்தளூர் என்று பெயர் பெற்றது. கோவில் பிரகாரத்தில் சந்திரன், மகாவிஷ்ணு இருவரும் அருகருகில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சந்திரன், மனோகாரகன் ஆவார். அதாவது, மன பலத்தை தருபவர்; அவர் வழிபட்ட இத்தலம், வருவோருக்கு ஆண்டு முழுவதும் ஆனந்தம், செயலில் வெற்றி உண்டாகும்.
எப்படி செல்வது?: கும்பகோணத்தில் இருந்து சீர்காழி வழியாக, 36 கி.மீ., விசேஷ நாட்கள்: சித்திரை மாதப்பிறப்பு, ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசி துலா பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி பிரம்மோற்சவம். நேரம்: காலை, 6:30 மணி முதல், -11:30 மணி வரை. மாலை, 5:00 மணி முதல், இரவு 8:30மணி வரை. தொலைபேசி: 04364 - 223 330 அருகிலுள்ள தலம்: கும்பகோணம் சாரங்கபாணி கோவில்.