புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் கோயில்களில் சிறப்பு பூஜை
விருதுநகர் : புத்தாண்டை முன்னிட்டு விருதுநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு நடந்தன. மார்கழி துவங்கியதில் இருந்தே தெருக்களில் உள்ள விநாயகர்கோயில் முதல் சைவ, வைணவ கோயில்கள் காலை 4:30 மணிக்கு திறக்கப்பட்டன. பக்தர்கள் கடும்குளிரிலும் கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தனர். சபரிமலை, பாதயாத்திரை செல்லும் பக்தர்களும் காலையில் சென்று வந்தனர். நேற்று புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள சிலகோயில்களில் இரவு 12:00 மணிக்கே சிறப்பு அபிேஷகம், அலங்காரம் வழிபாடு நடந்தது. பல கோயில்கள் வழக்கம்போல காலை 4:30 மணிக்கு திறக்கப்பட்டன. நேற்று மாநில அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால் காலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் காலை 4:30 மணிக்கு நடை திறக்கபட்டு, ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பக்தர்களும் குடும்பத்தினருடன் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் திருவண்ணாமலை பெருமாள் கோயில், மடவார்வளாகம் வைத்தியநாதசாமி கோயில்களிலும் காலை முதல் அதிகளவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.