உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): யோகம் வந்தாச்சு!

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): யோகம் வந்தாச்சு!

கண்ணசைவில் காரியம் சாதிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன் மற்றும்  கேது தரும் சிறப்பான பலனால் முன்னேறுவீர்கள். ஆனால் மற்ற கிரகங்கள் சாதகமற்ற  இடத்தில் இருப்பதால்  கவனமாக இருக்க வேண்டும். குருபகவான் 3-ம் இடமான துலாம் ராசியில் இருப்பதால் முயற்சிகளில் தடை ஏற்படும். புதன் ஜன.22-ல் இருந்து, பிப். 7-வரை 6-ம் இடத்தில் இருப்பதால் எடுத்த செயல் வெற்றி அடையும்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.  சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். மாத முற்பகுதியில் கணவன்-, மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்காது. சிறு சிறு பிரச்னை வந்து மறையும்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். புதன் ஜன.22-ல் சாதகமான இடத்துக்கு வருவதால் பிரச்னை நீங்கி ஒற்றுமை ஏற்படும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர்.  செவ்வாயால் பக்தி உயர்வு மேம்படும். பணவரவு நன்றாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பிப்.2,3-ல் நண்பர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர்.  ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். ஜன.29,30-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜன.14, பிப்.8,9,10-ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.பெண்களாலும் சில தொல்லைகள் வர வாய்ப்புண்டு.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், நல்ல  வளர்ச்சியும் பணவரவும் இருக்கும்.

பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர். ஜன.31, பிப்.1,4,5-ல் பணம் விரயம் ஆகலாம். முயற்சிகளில் தடைகள் வரலாம். இந்நாட்களில் நிறுவனத்தை நீங்களே நேரடியாகக் கண்காணிக்கவும். ஜன.17,18,19-ல் அபரிமிதமான பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம்.  சம்பள உயர்வுக்கு தடை ஏதும் இல்லை. வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர். பதவி உயர்வு உண்டு. ஜன. 26,27,28-ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம் எதிர் பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
அலுவலகத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான பதில் வரும். தொழில்நுட்பம் அறிந்தவர்களுக்கும், அனுபவஸ்தர்களுக்கும் யோகமான மாதம்.

கலைஞர்கள் முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் பிப்.6க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு அலைச்சல் ஏற்படும். எதிர்க்கட்சியினரால் பிரச்னை வரலாம். ஜன.15,16, பிப்.11,12ல் மனக்குழப்பம் ஏற்படும்.

மாணவர்கள் புதனால் கூடுதல் அனுகூலத்தை காணலாம். அதிக மதிப்பெண் பெறுவதோடு  போட்டிகளிலும் வெற்றி வாகை சூடும் வல்லமை கிடைக்கும். விவசாயிகளுக்கு நெல், கேழ்வரகு, காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து ஜன.19க்குள் வாங்கலாம். வழக்கு, விவகாரங்களில்  மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

* நல்ல நாள்: ஜன.17,18,19,20,21,26,27,28,29, 30, பிப். 2,3,6,7
* கவன நாள்: ஜன.22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: பச்சை, சிவப்பு

பரிகாரம்:

● வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு.
● வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை.
● பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் தீபம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !