ஆலமரத்தில் அம்மன் உருவம்? பொது மக்கள் வழிபாடு
ADDED :3164 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ராஜேந்திரப்பட்டினத்தில் உள்ள ஆலமரத்தின் வேரில், குழந்தையுடன் பெண் அமர்ந்திருப்பது போன்ற உருவத்தை அம்மனாக வழிபட்டு வருவது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ராஜேந்திரப்பட்டினத்தில் இருந்து கொக்கரசன்பேட்டை செல்லும் வழியில், பெலாந்துறை வாய்க்கால் கரை அருகில் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் அடி வேர் பகுதியில், ஒரு பெண், குழந்தையுடன் அமர்ந்திருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், மரத்தின் அடியில் அம்மன் எழுந்து அருளியதாக, பூஜை செய்து, வழிபட்டு வருகின்றனர். இத்தகவல் பரவியதால், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கு வந்து, பூஜை செய்து செல்கின்றனர்.