உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டுதல் நிறைவேற்றும் கன்னியம்மன்

வேண்டுதல் நிறைவேற்றும் கன்னியம்மன்

மடத்துக்குளத்தில் நடக்கும் வித்தியாசமாக வழிபாடுகளில் ஒன்றாக கன்னியம்மன் கோவில் உள்ளது. பெண் குழந்தைகளை சிறப்புடன் வளர்ப்பதும், விசேசங்கள், முக்கிய நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதும் கிராம சிறப்புகளில் முக்கியமானதாகும். இப்படி வளர்க்கப்பட்ட பெண் எதிர்பாராதவிதமாக ஒரு பொதுநன்மைக்காக அல்லது பலரை காப்பாற்ற போராடி, இறக்கும் போது, அந்த இழப்பை தாங்கமுடியாத பெற்றோர், உறவினர் மற்றும் கிராம மக்கள், அந்த பெண்ணை கன்னியம்மனாக நினைத்து வழிபட தொடங்குவார்கள். இந்த வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்கிறது. மடத்துக்குளம் அருகே வேடபட்டிகிராம எல்லையில் கன்னியம்மன் கோவில் உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடக்கிறது.

வேப்பமரத்தின் கீழ் உள்ள நடுகல்லை அம்மனாக வணங்குகின்றனர். இதற்கு, மஞ்சள் காப்பு செய்து, திருநீறு, சந்தனம், குங்கும பொட்டு வைத்துள்ளனர். கன்னியம்மனை சுற்றி, வேல், சூலம் என பல ஆயுதங்கள் உள்ளன. பூக்கள், எலுமிச்சம் பழமும் உள்ளது. திறந்வெளியில் உள்ள இந்த கோவிலில் விளக்கேற்றியும் வழிபாடு நடக்கிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கன்னியம்மன் உள்ளது. வேண்டுதல்களை பலமுறை துண்டு காகிதங்களில், எழுதி, கோர்த்து மாலையாக்கி இங்குள்ள மரத்தின் கிளையில், கட்டுவதும், நிறைவேறியபின்பு, நேர்த்தி கடன் செய்வதும் பக்தர்களின் வழக்கம். பல தலைமுறையாக வழிபாடு நடக்கிறது. இங்கு கோவில் அமைந்த காரணம், நடந்த சம்பவம் குறித்து தெரியவில்லை, என்றனர். மடத்துக்குளம் கே.டி.எல்., மில் பஸ் ஸ்டாப்பிலிருந்து வேடபட்டி செல்லும் பாதையில், இரண்டு கி.மீ., தொலைவில் கோவில் உள்ளது. பஸ் வசதி இல்லை. வாகனங்களில் சென்று திரும்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !